சத்துணவு திட்டத்தை பிளஸ்-2 வகுப்பு வரை விரிவுபடுத்த வேண்டும்ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் பேட்டி
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவரும், ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளருமான தியாகராஜன் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் தொடங்கப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டத்தை ஆசிரியர்கள் வரவேற்கிறோம். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின்படி இந்த திட்டம் தொடங்கப்பட்டதல்ல. தொழில்படிப்புகளுக்கும் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் என்ஜினீயரிங் உள்பட தொழில்படிப்புகள் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 
பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை பிளஸ்-2 வகுப்பு வரை விரிவுபடுத்த வேண்டும். மேலும் அதற்கு கலைஞரின் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவு திட்டம் என பெயர் சூட்டப்பட வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதனை முதல்-அமைச்சர் அமல்படுத்துவார் என நம்பிக்கை உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்த்துள்ளோம்.

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு பழையமுறைப்படி வழங்கப்பட வேண்டும். நடுநிலைப்பள்ளிகளில் நேரடி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆசிரியர்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்துகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களில் இணை இயக்குனர் தலைமையிலான குழு நேரடியாக விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். அந்த குற்றச்சாட்டு உண்மை இல்லையென்றால் அதற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் ஆசிரியர்கள் சுதந்திரமாக பணியாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் ராஜாங்கம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments