கறம்பக்குடி அருகே குளத்தில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கோட்டைக்காடு ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் தங்கையன். இவரது மகன் அசோக் (வயது 20). இதே பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் கண்ணன் (20). இவர்கள் இருவரும் டிப்ளமோ எலக்ட்ரானிக் படித்து முடித்து உள்ளனர். 2 பேரும் நேற்று காலை முள்ளங்குறிச்சி அருகே உள்ள நீர் பள்ளம் குளத்திற்கு குளிக்க சென்றனர். 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கறம்பக்குடி பகுதியில் பெய்த கனமழையால் இந்த குளம் நிரம்பி இருந்தது. இ்ந்நிலையில் குளத்தில் நண்பர்கள் 2 பேரும் உற்சாகத்துடன் குளித்தனர். அப்போது அசோக், கண்ணன் ஆகிய 2 பேரும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றனர். ஏற்கனவே அந்த குளத்தில் வண்டல் மண் எடுக்கப்பட்டதால் குளம் மேடு பள்ளமாக இருந்தது. 

இதில் பள்ளத்தில் சிக்கிய 2 வாலிபர்களும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினர். இதை கண்ட குளத்தின் கரையில் நின்ற மற்றொரு வாலிபர் கூச்சல் போட்டார். இதை கேட்டு அங்கு வந்த கிராம மக்கள் குளத்தில் இறங்கி வாலிபர்களையும் தேடினர். ஆனால் அவர்களை மீட்க முடியவில்லை.

இதையடுத்து கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தைராசு தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் குளத்தில் ரப்பர் மிதவைகள் மூலம் நீந்தி வீரர்கள் தேடினர். 2 மணிநேர போராட்டத்திற்கு பின் முதலில் கண்ணன் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து அசோக்கை தேடும் பணி நடந்தது. 

இதுகுறித்து தகவலறிந்த கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியை துரிதப்படுத்தினார். மேலும் ஆலங்குடியில் இருந்து தீயணைப்பு மீட்பு பணி வீரர்கள் வந்து தேடும் பணியை தொடர்ந்தனர். இதைதொடர்ந்து 5 மணி நேர போராட்டத்திற்கு பின் அசோக் உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து 2 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் கறம்பக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments