புதுக்கோட்டையில் தொடர் மழை; 988 எக்டேர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின




புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. வயல்களில் தற்போது நடவு செய்துள்ள நெற்பயிர்கள் பல இடங்களில் மூழ்கின. மாவட்டத்தில் மொத்தம் 988 எக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

மக்காச்சோளப்பயிர்கள் 252 எக்டேர் பரப்பளவில் மூழ்கின. தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், மழை பெய்யாவிட்டால் தண்ணீர் வடிந்துவிடும் எனவும் நெற்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர். வாராப்பூர் பகுதியில் குளத்தின் கரையில் ஒரு இடத்தில் உடைப்பு ஏற்பட்டதால் மணல்மூட்டைகள் கொண்டு பொதுமக்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

பாலம் அடித்து செல்லப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் அருகே காரசூரான்பட்டியிலிருந்து பரம்பூர் செல்லும் சாலையின் குறுக்கே உள்ள பாலம் சேரனூர் கண்மாய்க்கு சென்ற மழைநீரில் அடித்து செல்லப்பட்டதால் அந்தப்பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சேரனூர் கண்மாய்க்கு செல்லும் நீர் தடைப்படாமல் இருக்கவும் தண்ணீர் வீணாவதை சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சாலையின் குறுக்கே உள்ள பாலம் அடித்து செல்லப்பட்டதால் காரசூரான்பட்டி, வண்ணாரப்பட்டி, புதுப்பட்டி, காப்புக்குடி, கார்ணாப்பட்டி, அச்சுக்காட்டுப்பட்டி, உசிலம்பட்டி, காணியாப்பட்டி, கைவேலிப்பட்டி, மாங்காடு, கவிணாரிப்பட்டி, உப்பிலியவட்டி, புத்தகுடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பரம்பூருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
பாலத்தை சீரமைக்க கோரிக்கை
தற்போது இந்த பாலம் அடித்து செல்லப்பட்டதால் சுமார் 9 கிலோமீட்டர் வரை சுற்றி பரம்பூருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், பாலம் உடைந்து 4 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறும் கிராம மக்கள் பாலம் கட்டி 10 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது பெய்த மழைக்கு அந்தப்பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாலத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பாலத்தை சீரமைத்தால் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீட்டின் சுவர் இடிந்தது
விராலிமலை அருகே மேப்பூதகுடி கிராமத்தில் தொட்டியம்மாள் என்பவரது ஓட்டு வீட்டின் பக்கவாட்டு சுவரானது இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. கீரமங்கலம் அடுத்துள்ள குளமங்கலம் தெற்கு கிராமத்தில் கருப்பாயி என்பவரின் ஓட்டுவீட்டின் ஒரு பக்க சுவர் வெளிப்பக்கமாக சாய்ந்தது. எனவே சேதம் அடைந்த வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அன்னவாசல் பகுதிகளில் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு உணவு, உடைகளை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.
அதிகாரிகள் ஆய்வு
பொன்னமராவதி தாலுகா காரையூர் அருகே உள்ள குழவாய்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடு மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதேபோல் பொன்மணி என்பவரின் ஓட்டு வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்துள்ளது. இதனை காரையூர் வருவாய் ஆய்வாளர் பாண்டி, இடையாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பச்சையப்பன் மற்றும் கிராம உதவியாளர் மலர்கொடி ஆய்வு மேற்கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments