மாற்றம் என்பது நம்மிடம் இருந்து உருவாக வேண்டும்: திருமணத்தின்போது வரதட்சணை வாங்கக்கூடாது புதுகை மாவட்ட முதன்மை நீதிபதி பேச்சு!திருமணத்தின்போது வரதட்சணை வாங்கக் கூடாது எனவும், மாற்றம் என்பது நம்மிடம் இருந்து உருவாக வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் பேசினார்.

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுக்கோட்டை ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் சார்பு நீதிபதி ராஜா, வக்கீல்கள் பாண்டிசெல்வி, பர்வீன் பானு ஆகியோர் பெண்களுக்கான சட்டங்கள், அதில் உள்ள விவரங்கள் குறித்து பேசினர். 

இதில் ஆசிரியைகள், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார், சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் குடும்ப வன்கொடுமை, விவாகரத்து, வரதட்சணை தொடர்பான புகாரில் விசாரணை முறை, வழக்கில் உள்ள சந்தேகங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் பேசுகையில், திருமணத்தின்போது வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ கூடாது என முடிவெடுக்க வேண்டும். திருமணத்தின்போது வரதட்சணைக்கு பதிலாக பெண்களின் பெயரில் சொத்தை எழுதி வையுங்கள். 
இதேபோல மணமகன் வீட்டாரும், மணமகள் பெயரில் சொத்து எழுதி வைக்க கூறுங்கள். சமூகத்தில் மாற்றம் என்பது நம்மிடம் இருந்துதான் வர வேண்டும். வரதட்சணையாக பணம், பொருள் கேட்பது ஒரு குற்றமாகும் என்றார். அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு கையேடு புத்தகத்தை அவர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி ராஜா பேசுகையில், கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தின நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர், பள்ளியில் 4 மற்றும் 5-வது படித்து வரும் தனது 2 மகன்களுக்கு திருமணத்தின் போது கட்டாயமாக வரதட்சணை வாங்கமாட்டேன் என உறுதிமொழி எடுத்தார். மாற்றம் என்பதை தன்னிடம் அவர் விதைத்துக் கொண்டார். அவருடைய தன்னம்பிக்கை, முயற்சிக்கு தலை வணங்குகிறோம் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments