மாணவியை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை- கூலித்தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரவாதி அருகே மறவாமதுரை கங்காணிப்பட்டியை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது34). கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

இந்த நிலையில் ராஜ்குமார், பிளஸ்-1 மாணவி ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொண்டு பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அந்த சிறுமியை கொலை மிரட்டல் செய்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். 

இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் ஆனவுடன், அதை கலைக்க மருத்துவமனைக்கும் அழைத்துசென்றார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில்  கடந்த ஆண்டு 2020 மார்ச் மாதம் 7-ந் தேதி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா இன்று  தீர்ப்பு வழங்கினார். இதில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதற்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், அபராதம் ரூ.50 ஆயிரமும், அபராத தொகை கட்டத்தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதம் ரூ.20 ஆயிரமும், அபராத தொகை கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் அரசு தரப்பில் சிறுமிக்கு ரூ.1½ லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments