படகு மீது இலங்கை கப்பல் மோதி பலியான கோட்டைப்பட்டினம் மீனவரின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய கோரி கலெக்டரிடம் மனைவி கோரிக்கை!!



படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் இறந்த கோட்டைப்பட்டினம் மீனவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி அவரது மனைவி, கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி கடலில் மீன்பிடிக்க விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 39), ராஜ்கிரண் (30), சுகந்தன் (23) ஆகியோர் சென்றனர். இதில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அவர்களது படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படகு தண்ணீரில் மூழ்கியதில் ராஜ்கிரண் பலியானார். மற்ற 2 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களது நாட்டிற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடம் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இறந்த மீனவரின் உடலை பெறுவதிலும், கைதான மீனவர்களை விடுவிக்கவும் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இறந்த ராஜ்கிரண் உடலை இலங்கை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின், அங்கிருந்து கடற்படை மூலம் சர்வதேச எல்லையில் தமிழக கடற்படை, கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கடந்த 23-ந் தேதி ஒப்படைத்தனர். ராஜ்கிரண் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது. மேலும் அவரது உடலுக்கு அமைச்சர் ரகுபதி, கலெக்டர் கவிதாராமு உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

ராஜ்கிரணின் உடலை கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மற்றும் உறவினர்கள் உறுதி செய்த பின் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இறந்த ராஜ்கிரணின் மனைவி பிருந்தா மற்றும் அவரது உறவினர்கள் சிலர் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் கவிதாராமுவை சந்தித்து பிருந்தா தரப்பில் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், ராஜ்கிரணின் உடலை இந்திய அரசு மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் இலங்கை கடற்படையினர் அடித்து துன்புறுத்தி, துப்பாக்கியால் சுட்டு அவரை கொலை செய்திருக்கலாம். 

ராஜ்கிரணின் உடலை அவரது தாயார் மற்றும் பிருந்தா பார்க்கவில்லை எனவும், அதனால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து அறிக்கை வெளியிட வேண்டும். பிருந்தாவுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ராஜ்கிரண் இறந்த சம்பவத்தில் தமிழக அரசு சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்திருப்பதை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்திருந்தனர்.

மனுவை பெற்ற கலெக்டர் கவிதாராமு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மீனவர் இறந்த சம்பவத்தில் மீண்டும் அவரது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments