எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு பட்டா விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்: மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு!



தமிழகம் முழுவதும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா விவரங்களை மாவட்ட வாரியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று ஆதிதிராவிடர் நலத்துறைக்கு, தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் வட்டம் பொத்தூர் கிராமத்தில், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது குறித்த தகவல்களை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டு இ.குமார் என்பவர் மனு கொடுத்தார். அந்த மனுவை பரிசீலித்த திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தனி வட்டாட்சியர், எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, குமார், மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மாநில தகவல் ஆணையர் சு.முத்துராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரரின் கோரிக்கை தொடர்பான ஆவணங்களை பரிசீலித்த தகவல் ஆணையர் சு.முத்துராஜ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது? என்ற விவரங்களை அடங்கிய பட்டியலை மனுதாரருக்கு 7 நாட்களுக்குள் பொன்னேரி தனி வட்டாட்சியர் வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினர்களில் யார் யாருக்கெல்லாம் இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பான விவரங்களை மாவட்ட வாரியாக இணையதளத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர், 2 மாதங்களுக்கு அதுதொடர்பான அறிக்கை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை வருகிற ஜனவரி 19-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments