புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டம்: மானியத்தில் மரக்கன்றுகள் வினியோகம்! புதுகை மாவட்ட விவசாயிகள் பயன்பெற அழைப்பு!!



புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நலனிற்காக ‘தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்’ என்ற புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டம் 2021-22-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வாயிலாக செயல்படுத்திட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் ரூ.15 மதிப்புள்ள தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, செம்மரம், வேங்கை, சந்தனம் உள்பட அதிகப்பலன் தரும் தரமான மரக்கன்றுகள் தமிழ்நாடு அரசு வனத்துறையின்கீழ் மாவட்டத்திலுள்ள 4 அரசு நாற்றங்கால் பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழு மானிய விலையில் வழங்கப்படும். 

விவசாயிகள் மரக்கன்றுகளை பெறுவதற்கு தங்கள் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி தங்களின் விவரங்களை தெரிவித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 1,85,700 மரக்கன்றுகள் ரூ.27 லட்சத்து 85 ஆயிரத்து 500 மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது.

மரக்கன்றுகள் வினியோகம் ‘வரப்பு நடவு முறை’ என்றால் அதிகபட்சமாக ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், ‘குறைந்த செறிவு நடவு முறை’ என்றால் ஏக்கருக்கு அதிகபட்சமாக 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மரக்கன்றுகள் அடுத்த மாதத்திற்குள் (டிசம்பர்) நடவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நடப்பட்ட மரக்கன்றுகள் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் பதிவேட்டில் பதியப்படும். 

இத்திட்டத்தில் விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் உழவன் செயலியில் பதிவு செய்து பயன் பெறலாம். சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன விவசாயிகளுக்கும் உரிய விகிதாச்சாரப்படி முன்னுரிமை அளிக்கப்படும் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments