புதுகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு!புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இது மழைக்காலமா? அல்லது கோடைக்காலமா? என்று நினைத்து பார்க்கும் வகையில் சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை காலத்தில் இருப்பது போன்று வெயில் சுட்டெரித்து வருகிறது.

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) முதல் மீண்டும் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, சென்னையில் கன மழை பெய்வது மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னைக்கு கன மழை வருவது தாமதமாகியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தெற்கு வங்கக்கடல் பகுதியில் (4.5 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது வரும் நாட்களில் மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக 25-ந்தேதி (இன்று) ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

26-ந்தேதி (நாளை) தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், சென்னை திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

27-ந்தேதி சென்னை, கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

28-ந்தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் 25-ந்தேதி மீனவர்கள் செல்லவேண்டாம். 26-ந்தேதி தமிழக கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில்சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்.

இதேபோல 27-ந்தேதி, 28-ந்தேதிகளில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments