மகசூல் இழப்பு ஏற்படாமல் பயிரை காப்பாற்றுவது எப்படி? அதிகாரி விளக்கம்!!புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாத்திடவும், விதைக்கப்பட்ட வயல்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் அழுகி விடாமல் இருக்க தக்க வடிகால் வசதி செய்ய வேண்டியது மிக அவசியம். மழை நீரை வடித்து வேர் பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா நெல் பயிரானது தற்போது வளர்ச்சி பருவத்தில் உள்ளது. அதிக மழையின் காரணமாக பயிர்கள் பாதிப்படைந்து மஞ்சள் நிறமாக காணப்படுகிறது. எனவே, அதிகப்படியான நீரை வடித்து விட்டு போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன் இளம் பயிர்களுக்கு ஒரு கிலோ ஜிங்க் சல்பேட், 2 கிலோ யூரியா ஆகியவற்றை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைகள் மீது படுமாறு தெளிக்க வேண்டும்.

பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டால் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை போக்கிட ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒருநாள் இரவு வைத்திருந்து கலவையுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து இட வேண்டும். பூக்கும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு 1.4 கிலோ டி.ஏ.பி. உரத்தை நீரில் முதல்நாள் ஊறவைத்து மறுநாள் வடிகட்டி அந்த கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ பொட்டாசை 190 லிட்டர் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். 

இவ்வாறு செய்வதால் மகசூல் இழப்பு ஏற்படாமல் பயிரை காப்பாற்றலாம். மேற்கண்ட தகவலை விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் ஜெகதீஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments