சுகாதார பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 15-ந் தேதி கடைசி நாள்
பொதுமக்களுக்கு சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் இடைநிலை சுகாதார பணியாளர்கள் துணை சுகாதார நிலைய நலவாழ்வு மையத்திற்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்த தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்திற்கு பல்நோக்கு சுகாதாரப்பணியாளர்கள் (ஆண்), சுகாதார ஆய்வாளர்கள் 58 பணியிடங்களுக்கும் மற்றும் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் 106 பணியிடங்களுக்கும், அறந்தாங்கி சுகாதார மாவட்டத்திற்கு பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் (ஆண்), சுகாதார ஆய்வாளர்கள் 41 பணியிடங்களுக்கும் மற்றும் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் 74 பணியிடங்களுக்கும் மாவட்ட சுகாதார சங்கம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். கொரோனா தொற்று காலத்தில் வெளி ஆதார முறையில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்களின் அரிய பணியினை கருத்தில் கொண்டு மாவட்ட சங்கங்களின் வாயிலாக தேர்வு நடைபெறும்போது கொரோனா பெருந்தொற்று காலத்தில் இவர்கள் பணிபுரிந்தமைக்கான முன்னுரிமை அளிக்கப்பட்டு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இந்த நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்கள் மாவட்ட வாரியாக காலியிட விவரம் தேசிய நல்வாழ்வு குழும வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த ஆவண நகல்களுடன் புதுக்கோட்டை சாந்தநாதபுரம் 6-ம் வீதியில் அமைந்துள்ள துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments