தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறை: அரசாணை வெளியீடு
தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுடும் நடைமுறையைப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாணையின் விவரம் வருமாறு:


பொதுமக்களும் பொதுப் பயன்பாடுகளில் இம்முறையைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படும். மேற்படி அறிவிப்பு தொடர்பாக தமிழ் வளர்ச்சி இயக்குநர் தனது 16.09.2021 நாளிட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசின் ஆட்சி நிர்வாகத்தில் முழுமையாக தமிழ் பயன்பாட்டு மொழியாக இருக்க செய்திடும் வகையில் தமிழ் ஆட்சிமொழி சட்டம் 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின் முதன்மைப் பணியாக அரசு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் தமிழிலேயே ஒப்பமிட வேண்டும் என முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை (Initials) (தந்தை, தாய், ஊர்) பெயர்களை குறிப்பிடும் முன் எழுத்துக்கள் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டது.

மேலும் இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசு கடிதத்தில் அரசுத் துறைகளில் வெளியிடப்படும் அறிவிப்புகள், அறிவிக்கைகள் ஏல விளம்பரங்கள் இதர விளம்பரங்கள் போன்றவை வெளியிடுகையில் அதில் அலுவலர்களின் பெயர்களுக்கு முன் குறிப்பிடப்படும் முன்னெழுத்தானது ஆங்கில எழுத்து உச்சரிப்பதற்கான தமிழ் எழுத்து (எஸ்.முத்து) எழுதப்படுகிறது.

இதனைத் தவிர்த்துச் சரியாக தமிழ் முன் எழுத்தையே (சு.முத்து) பயன்படுத்துமாறும் அவ்வாறே அரசு அலுவலர்கள் கையொப்பமிடும் போது பெயருக்கு முன் சரியான தமிழ் எழுத்துக்களையே குறிப்பிட்டு கையொப்பமிடுமாறும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கையொப்பம் மற்றும் முன்னெழுத்து ஆகியவற்றை தமிழில் எழுத பல்வேறு அரசாணைகள் மூலம் தெரிவிக்கப் பெற்றிருந்தும் அரசு அலுவலர்கள் கூட முன்னெழுத்தை முழுமையாகத் தமிழில் எழுதுவதில்லை.

எனவே மேற்கண்ட அரசாணைகளின் அடிப்படையிலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பினை செயற்படுத்தும் வகையிலும் முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் அனைத்து இடங்களிலும் தங்களின் பெயர்களை எழுதும் போது முன்னெழுத்தை தமிழிலேயே எழுத வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களும் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தை தமிழிலேயே எழுத வேண்டும். பள்ளி, கல்லூரி முடித்து சான்றிதழ் பெறும்போதும் முன்னெழுத்துடன் கையெழுத்து தமிழில் இருந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்கும் நடைமுறையின் கொண்டு வரலாம்,

அதே போன்று மாணவர்களின் சான்றிதழை பெற்றோர் கையொப்பமிட்டு பெறும்போது முன்னெழுத்து மற்றும் கையெழுத்தினை தமிழிலேயே இடம்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப் பெறலாம்.

பள்ளிப் பருவத்திலேயே இந்த நடைமுறையினை ஊக்குவித்தால் மாணவர்களின் மனதில் பசுமரத்து ஆணி போல் பதிய வழிவகுக்கும்.

பொதுமக்கள் அதிகம் அணுகும் அரசுத் துறைக்கான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மின்சார வாரியம், போக்குவரத்துத் துறை பத்திரப் பதிவுத் துறை, வருவாய்த் துறை, வணிகவரித் துறை, சமூக நலத் துறை, காவல் நிலையம், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆகியவற்றில் பொதுமக்களால் நிறைவு செய்து அளிக்கப்பெறும் கோரிக்கை விண்ணப்பங்களில் முன்னெழுத்துடன் தமிழில் கையொப்பம் இடும் வகையில் நடைமுறைப்படுத்தப் பெறலாம் (உதாரணம் K.N.சுவாமிநாதன் என்பதை கந.சுவாமிநாதன்).

ஏனைய அரசுத் துறைகளான வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள் என அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்திடலாம்.

மேலும் அனைத்துத் துறைகளிலும் அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்படும் பெயர்களில் முன்னெழுத்தையும் தமிழ், ஆங்கிலம் கலந்து பதிவு செய்யலாம் பெயரின் முன்னெழுத்து மற்றும் பெயர்களை முழுமையாகத் தமிழிலேயே பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் ஆணையிடப் பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments