ஜோஸ் ஆலுக்காஸில் அடித்த கொள்ளை: சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்த 16 கிலோ தங்க, வைர நகைகள் மீட்பு!! கட்டிட தொழிலாளி கைது!!!



வேலூர் நகைக்கடையில் முகமூடி அணிந்து கொள்ளையடித்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவர் சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்த 16 கிலோ தங்க, வைர நகைகள் மீட்கப்பட்டன.

வேலூர் -காட்பாடி சாலையில் தோட்டப்பாளையத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 15-ந் தேதி மர்மநபர் சுவரில் துளைபோட்டு உள்ளே சென்று சுமார் 16 கிலோ தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். உள்ளே புகுந்த மர்மநபர் சிங்க படம் கொண்ட முகமூடி, தலையில் விக் அணிந்திருந்தார். இந்த கொள்ளை சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக 8 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் நகைக்கடையில் கொள்ளையடித்தது அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகன் டீக்காராமன் (வயது 23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து கைது செய்து நகைகளை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
கைதான டீக்காராமன் கட்டிட தொழிலாளி. விஜயகுமார் தெரு ஓரங்களில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகளையும் எடுத்து அதை விற்று குடும்பம் நடத்தி வருகிறார். டீக்காராமன் சிறு வயதில் இருந்தே சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 15-ந் தேதி வேலூரில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காசில் சுமார் 16 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்துள்ளார்.
நகைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்த இடம்.

இந்த நிலையில் நகைக்கடையில் முகமூடி அணிந்து கொள்ளையடித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அப்போது பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீஸ்காரர் விநாயகம் ஆகியோர் அதை பார்த்துள்ளனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் பள்ளிகொண்டா தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கொத்தனார் வேலை செய்தபோது அங்கு லேப்-டாப் திருடிய டீக்காராமனின் உடல்மொழி போன்று அவர்களுக்கு தெரிந்தது.

இதுகுறித்து அவர்கள் விசாரணை செய்தபோது நகைக்கடையில் கொள்ளையடித்தது டீக்காராமனாகத்தான் இருக்கும் என்று 90 சதவீதம் அவர்கள் ஊர்ஜிதம் செய்தனர்.
அதன்அடிப்படையில் ஒடுகத்தூர் பகுதியில் நோட்டமிட்ட போலீசார் கடந்த 18-ந் தேதி (சனிக்கிழமை) இரவு வாடகை வீட்டில் தங்கி இருந்த டீக்காராமனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் ஒடுகத்தூர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியதும், நகைக்கடையில் திருடியதும், அதை ஒடுகத்தூர் உத்திரகாவேரி ஆற்றங்கரையோரம் உள்ள சுடுகாட்டில் பதுக்கி வைத்ததையும் ஒப்புக்கொண்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து நேற்று 100-க்கும் மேற்பட்ட போலீசார் நகை புதைத்து வைக்கப்பட்டிருந்த சுடுகாட்டு பகுதிக்கு சென்றனர். உடன் டீக்காராமனையும் அழைத்துச் சென்றனர். அங்கு அவர், நகைகளை புதைத்த இடங்களை அடையாளம் காட்டினார். அந்த இடத்தை போலீசார் தோண்டினர்.

ஒரு இடத்தில் சுமார் 10 கிலோ நகைகள் பிளாஸ்டிக் பையில் இருந்தது. அதன் அருகே மற்றொரு இடத்தில் சுமார் 6 கிலோ நகைகளும் இருந்தது. தோண்டி மீட்கப்பட்ட நகைகளில் விலை விவர அட்டைகளும் இருந்தது. பின்னர் அவற்றை போலீசார் எடுத்துச் சென்றனர். மேலும் டீக்காராமனையும் கருப்பு துணியால் முகத்தை மூடியவாறு போலீசார் மேல்விசாரனைக்காக அழைத்துச் சென்றனர்.
விசாரணையின்போது எப்படி சுவரை துளையிட்டு உள்ளே சென்றது என்பது குறித்தும், நகைகளை கொள்ளையடித்தது குறித்தும் அவன் நடித்து காட்டினான்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments