வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம் ரூ.500 கோடி பரிவர்த்தனை பாதிப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.500 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

வேலைநிறுத்தம்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் வகையில் பாராளுமன்றத்தில் மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதை கண்டித்து வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பினர் 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நாடு முழுவதும் அறிவித்திருந்தனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உதவி செயலாளர் மாயாண்டி முன்னிலை வகித்தார். எல்.ஐ.சி. ஊழியர் சங்க செயலாளர் அசோகன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

ரூ.500 கோடி பரிவர்த்தனை பாதிப்பு

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். வங்கி ஊழியர்களின் 2 நாள் போராட்டம் குறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள் உள்ளன. இதில் பணியாற்றும் 1,800 ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். 2 நாட்களில் காசோலை, ரொக்கம் என வங்கிகளில் ரூ.500 கோடி வரை பரிவர்த்தனை பாதிப்படைந்தது. ஏ.டி.எம்.களில் சில இடங்களில் பணம் நிரப்பப்படவில்லை’’ என்றார்.

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments