தி.மு.க. அரசு மீது வைத்துள்ள நம்பிக்கை காப்பாற்றப்படும்: பொதுமக்களின் மனுக்கள் மீது 100 சதவீதம் உறுதியான நடவடிக்கை திருச்சியில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு




தி.மு.க. அரசு மீது வைத்துள்ள நம்பிக்கை காப்பாற்றப்படும். பொதுமக்களின் மனுக்கள் மீது 100 சதவீதம் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சியில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மு.க.ஸ்டாலின் வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை தஞ்சையில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பின்னர், கார் மூலம் திருச்சி வந்த அவர், மன்னார்புரம் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அதனைத்தொடர்ந்து திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாயனூர் கேர் கல்லூரி வளாகத்தில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.1,084 கோடியே 80 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டவும், திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மன்னார்புரம் விருந்தினர் மாளிகையில் இருந்து மாலை புறப்பட்டு விழா நடக்கும் கேர் கல்லூரி வளாகத்திற்கு மாலை 5.25 மணிக்கு வந்தார்.

பஸ் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார்

பின்னர் விழா மேடை அருகில் அமைக்கப்பட்டிருந்த அரசுத்துறை திட்ட விளக்க கண்காட்சி அரங்குகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து பயனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் மாலை 5-40 மணியளவில் விழா ேமடைக்கு வந்ததும் நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வரவேற்று பேசினார்.

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பஞ்சப்பூர் புதிய பஸ் முனையத்துக்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட சத்திரம் பஸ் நிலையத்தை திறந்து வைத்தும் மற்றும் மாவட்டத்தில் ரூ.1,084 கோடியே 80 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாநாட்டு மன்னர் கே.என்.நேரு

திருச்சி மாநகருக்கு நான் எத்தனையோ முறை வந்து சென்று இருக்கிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் மாநாடு போன்ற ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்திக் காட்டினார். மீண்டும் ஒரு மக்கள் கடலை நேரு இங்கு உருவாக்கியிருக்கிறார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது கூட, மாநாட்டு மன்னர் கே.என். நேரு என்று குறிப்பிட்டார்.

அவரைப் பொறுத்தமட்டில் மாநாடு என்றால் ஒரு டீக்கடைக்கு சென்று டீ குடிப்பது போன்றது. நானும் நேரு என்றால் மாநாடு. மாநாடு என்றால் நேரு என்று பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். நேருவுக்கு நிகர் நேரு தான். எதிரியை நேருக்கு நேர் சந்திப்பதிலும், நட்பை நெஞ்சு உணர்வோடு கடைபிடிப்பதிலும் அவருக்கு நிகர் அவர் தான். சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் ஒரு அரசு நிகழ்ச்சியை அங்குள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் கம்பீரமாக நடத்திக் காட்டினார். அதுபோல திருச்சியில் தற்போது நடத்திக் காட்டி இருக்கிறார்.

100 சதவீதம் உறுதியான நடவடிக்கை

திருச்சி மாவட்டத்தில் நேருவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இரட்டையர்களாக வலம் வந்து சுற்றி 78 ஆயிரத்து 152 மனுக்களை பெற்று இருக்கிறார்கள். அதனை அலசி ஆராய்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி 45 ஆயிரத்து 88 மனுக்களுக்கு தீர்வு கண்டிருக்கிறார்கள். இதர மனுக்களை பரிசீலனை செய்து வருகிறார்கள். இதில் தகுதியுடைய அனைத்து மனுக்களும் நூற்றுக்கு நூறு சதவீதம் உறுதியாக நிறைவேற்றித் தரப்படும்.

தமிழகத்தில் எந்த ஒரு மனிதரிடமும் கோரிக்கை மனு இல்லை என்ற நிலையை உருவாக்குவதே இந்த அரசின் லட்சியம். நாம் அந்த சூழலை உருவாக்கிட வேண்டும்.

பின்வாங்க மாட்டோம்

மீண்டும், மீண்டும் சுழற்சி முறையில் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும். எப்போதும் இப்படித் தான் இருப்போம். எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம். திருச்சி மாநகராட்சியில் ரூ.210 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், ரூ.200 கோடியில் 100 எம்.எல்.டி. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்படுகிறது.

துறையூரில் மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டம், மணப்பாறையில் கூட்டு குடிநீர் திட்டத்தை ரூ.18 கோடியில் மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சியில் நடைபெறும் திட்டப்பணிகளை நானே அவ்வப்போது வந்து நேரில் ஆய்வு செய்வேன்.

தலைதூக்கும் ஒமைக்ரான்

கொரோனா வைரசை தொடர்ந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வெளிநாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் கடந்த 2 நாட்களாக தலைகாட்டத் தொடங்கியுள்ளது. இதனால் திருச்சி, தஞ்சையில் நடைபெறும் விழாவில் நோய் பரவும் வாய்ப்பு ஏற்படுமோ? என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை சென்னைக்கு அழைத்து பேசினேன். அப்போது அவர்கள் 25 சதவீத பயனாளிகளை மட்டுமே அழைத்து சமூக இடைவெளியுடன் விழாவை நடத்தி விடலாம் என்ற நம்பிக்கையை அளித்தார்கள்.

இந்த விழாவில் திருச்சியில் மட்டும் 44 ஆயிரத்து 645 பயனாளிகளுக்கு ரூ.327 கோடியே 48 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. விழாவிற்கு வந்திருக்கும் பயனாளிகளை தவிர்த்து மீதமிருக்கும் பயனாளிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்குள் வீடு தேடி மக்கள் பிரதிநிதிகள் அல்லது அரசு அதிகாரிகள் வந்து நலத் திட்ட உதவிகளை வழங்குவார்கள். உள்ளபடியே மக்கள் நலன் சார்ந்த அரசாக இந்த அரசு இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். தெம்புடன் இறுமாப்புடன் இருக்கிறேன்.

மக்கள் நம்பிக்கையை காப்போம்

திருச்சியில் இருந்து விழா நடைபெறும் இடத்திற்கு 15 நிமிடங்களில் வந்து விடலாம். ஆனால் 1 மணி நேரத்திற்கும் மேலாகி இருக்கிறது. சாலைகளின் இருபுறங்களிலும் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியுடன், மலர்ச்சியுடன் என்னை வரவேற்றார்கள். இதை பார்த்து நான் பூரித்துப் போனேன். மக்கள் நம் மீது வைத்த நம்பிக்கையை எப்படி காப்பாற்றப் போகிறோம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது எனக்கு தைரியம் வந்து விட்டது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று அண்ணா சொன்னார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் 7 உறுதிமொழிகளை தந்தேன். தந்தை பெரியாரின் சமூகநீதி ஆட்சி, அறிஞர் அண்ணா கண்ட மாநில சுயாட்சி, முத்தமிழறிஞர் கலைஞரின் நவீன மேம்பாடு, காமராஜரின் கல்வி வளர்ச்சி, ஜீவா கண்ட சமத்துவ ஆட்சி ஆகியவற்றை முன்வைத்து ஆட்சி நடக்கிறது.

புதிய தொழிற்சாலைக்கு ஒப்பந்தம்

இந்த ஆட்சியில் பல புதிய தொழிற்சாலைகள் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள். தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை தமிழகம் அடையும். அதேபோன்று தேர்தல் அறிக்கையில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளித்தேன். தனி பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறோம்.

அதேபோன்று லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி மகசூலை அதிகப்படுத்தி இருக்கிறோம். கிராமப்புற திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா கோரத்தாண்டவம் ஆடிய காலகட்டத்தில் அதனை கட்டுப்படுத்தியும், மழை-வெள்ளத்தால் ஏற்பட்ட சோதனைகளை வென்றோம். உங்களின் பிரச்சினைகளை எங்கள் தோள் மீது இறக்கி வையுங்கள். இன்னும் ஒரு நாளில் 2022 புதிய ஆண்டு பிறக்க இருக்கிறது. உங்கள் அனைத்து ஆசைகளும் நிறைவேற்றப்படும். தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க நடவடிக்கை எடுக்கப்படும். 2022 சிறந்த ஆண்டாக அமைய இந்த அரசு கடைமையாற்றும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நேரில் ஆய்வு

விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேசினர். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்துரை வழங்கினர். இதில், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில், மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் நன்றி கூறினார்.

அதைத்தொடர்ந்து அடிக்கல் நாட்டிய திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் முனையம் அமைய உள்ள இடத்தை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின்னர், அவர் திருச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments