கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீர்! டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்!! நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகம் செவிசாய்க்குமா..?தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சலால் அன்றாடம் ஏராளமானோர் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதை காண முடிகிறது.அதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன் R.புதுப்பட்டினத்தை சேர்ந்த பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிச்சை பெற்று வீடு திரும்பினான் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் வீடுகளுக்கு அருகில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் ஏற்படும் தொற்று நோய் உள்ளிட்ட டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் சாலைகள் சரிவர அமைக்கப்படாத நிலையில், வீடுகளுக்கு முன்பு சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி கிராமத்தில் சிறுவர்கள் முதல் முதியோர் வரை காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் தற்போது கொரோனா தொற்று, ஒமைக்ரான் தொற்று பரவி வரும் சூழ்நிலையில், வீடுகளுக்கு அருகில் பல நாட்களாக தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

மேலும் இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது, “தெருவில் சாக்கடை ஓடுவதால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில்தான் அதிகளவிலான மக்கள் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மேலும் 11 வயதுடைய சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தான். எனவே இது போன்று உயிர் பலிகள் இனிமேல் நடக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
பலமுறை புகார் செய்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தூய்மை பணிகள் மேற்கொள்ளவும் முன்வரவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து தொற்று நோய் உள்ளிட்ட டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அன்பார்ந்த கோபாலப்பட்டிணம் தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வல அமைப்புகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..

சகோதரர்களே, தற்போது தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

எனவே நமது ஊர் கோபாலப்பட்டிணம் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் மூலம் பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த காலங்களை போல் கோபாலப்பட்டிணம் தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வல அமைப்புகளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்ய முன்வர வேண்டும் என்று கோபாலப்பட்டிணம் மீடியா சார்பாக உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

சகோதரர்களே நிலவேம்பு கசாயம் அருந்துவது மூலம் நமது ஊர் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் பாதுகாக்க முடியும்.

பொது நலன் கருதி வெளியிடுவது...
GPM மீடியா டீம்,
கோபாலப்பட்டிணம்.
புதுக்கோட்டை மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments