புதுக்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை தடுத்து நிறுத்திய இந்து அமைப்பினர்! மற்றொரு தரப்பினர் திரண்டதால் பரபரப்பு!!



புதுக்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றிச்சென்ற லாரியை இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். அப்போது மற்றொரு தரப்பினர் திரண்டதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து கேரளாவுக்கு நேற்று காலை ஒரு லாரியில் மாடுகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டன. அந்த மாடுகளின் கால்களை உடைத்தும், சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதாகவும், அளவுக்கு அதிகமாக மாடுகள் லாரியில் ஏற்றி கொண்டு செல்லப்படுவதாகவும் புகார் கூறி அந்த லாரியை புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத் உள்பட இந்து அமைப்பினர் மறித்தனர். மேலும் லாரியை புறப்படவிடாமல் தடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இந்து அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்து அமைப்பினர், லாரியில் மாடுகளை சித்ரவதை செய்து கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதாக கூறினர். மேலும் லாரியில் இருந்து மாடுகளை இறக்கி பார்வையிட வேண்டும் என்றனர்.

இதைத்தொடர்ந்து மாடுகள் ஏற்றப்பட்ட லாரி புதுக்கோட்டை சந்தைப்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு திரண்டு வந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாடுகளை இறக்கி பார்க்கக்கூடாது என கூறினர். ஆனால் இந்து அமைப்பினர் மாடுகளை லாரியில் இருந்து இறக்கி பார்க்க வேண்டும் என்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதற்கிடையில் அந்த பகுதிக்கு இன்ஸ்பெக்டர்கள் குருநாதன் (டவுன்), முகமது ஜாபர் (கணேஷ்நகர்) மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். மேலும் எதுவாயினும் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினர். அதன்பின் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
 
அதன்பின்னர் லாரி திருக்கோகர்ணம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாடுகளை இறக்கி பார்வையிட்டு எண்ணப்பட்டன. அதில் 50 மாடுகள் இருந்தநிலையில் வேறு லாரிகள் வரவழைக்கப்பட்டு அவை பிரித்து அனுப்பப்பட்டன. இந்த மாடுகள் பொள்ளாச்சி சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விற்பனைக்காக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் புதுக்கோட்டையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments