புதுகை மாவட்டத்தில் சேதமடைந்த பள்ளிக்கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது!



புதுக்கோட்டை மாவட்டத்தில் சேதமடைந்த பள்ளிக்கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது.

நெல்லையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் கழிவறை கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளின் கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்கள் 300-க்கும் மேற்பட்டவை என கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 100 பள்ளிகளில் கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளது. இதில் 16 கட்டிடங்கள் பொதுப்பணித்துறையினர் மூலமும், 84 பள்ளிகள் ஊரக வளர்ச்சி துறை மூலமும் இடிக்கப்பட உள்ளது.

அதன்படி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சேதமடைந்த, பயன்பாடற்ற கட்டிடங்களை இடிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்த, பயன்பாடு இல்லாத கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதில் பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிடங்கள் இடிக்கும் பணி நடந்தது. இதில் கட்டிட தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த பணியை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன், புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி மஞ்சுளா உள்ளிட்டோர் பார்வையிட்டனர். தொடர்ந்து மற்ற இடங்களில் பள்ளிகளில் கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக திட்டமிடப்பட்டுள்ள அரசு பள்ளிகளின் கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments