பொட்டாஷ் உரத்தை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை! புதுகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் சுமார் 94 ஆயிரத்து 205 எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்காச்சோளம், உளுந்து, தென்னை, கரும்பு மற்றும் வாழை உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் பொட்டாஷ் உரமிடும் பருவத்தில் உள்ளது. தற்போது புதிதாக பெறப்படும் பொட்டாஷ் உர மூட்டை அதிகபட்ச விற்பனை விலை ரூ.1,700 ஆகும். இந்த விலையேற்றம் கடந்த 8-ந் தேதிக்கு பின் புதியதாக வரப்பெற்ற பொட்டாஷ் உரத்திற்கு மட்டுமே பொருந்தும். 

ஏற்கனவே இருப்பிலுள்ள பொட்டாஷ் உரத்தை மூட்டையின் மேல் அச்சிடப்பட்டுள்ள ரூ.1,040 என்ற விலைக்கே விற்பனை செய்ய வேண்டும். இருப்பிலுள்ள பொட்டாஷ் உர மூட்டைகளை ரூ.1,040-க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்வதை உறுதி செய்திட மாவட்ட அளவில் சிறப்பு பறக்கும் படை மூலம் தீவிரமாக கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வின்போது கூடுதல் விலைக்கு பழைய பொட்டாஷ் உர மூட்டையினை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உர விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கையுடன் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். 

மேலும், ஆய்வின்போது பொட்டாஷ் உரத்தினை கள்ளச்சந்தையில் விற்பது, பதுக்குவது, பிற மாவட்டங்களுக்குக் கடத்துவது மற்றும் விவசாயம் அல்லாத பிற தேவைகளுக்காக பயன்படுத்துவது போன்ற நிகழ்வுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கவிதாராமு எச்சரித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments