புதுக்கோட்டையில் கொட்டித்தீர்த்த கன மழை: சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை




புதுக்கோட்டையில் கொட்டித்தீர்த்த கன மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கன மழை

கடலோர பகுதியில் ஏற்பட்ட வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 31-ந் தேதியும், நேற்று முன்தினமும் கன மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,340.70 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி இருந்தது. இதில், அதிகபட்சமாக திருமயம் பகுதியில் 132 மி.மீ., ஆலங்குடியில் 130 மி.மீ., புதுக்கோட்டையில் 117 மி.மீ. மழை பெய்தது.

மழையினால் மாவட்டத்தில் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடை செய்ய இருந்த நேரத்தில் தற்போது பெய்த மழையில் நெற்பயிர்கள் நாசமானதை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடித்தனர். எனவே சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அன்னவாசல்

அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் காலையில் தொடங்கிய மழை நள்ளிரவு வரை பெய்தது. இதனால் கடைவீதி, சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இடைவிடாமல் பெய்த மழையால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்தபடியும், சிலர் குடைபிடித்தபடியும் சென்றனர்.

அன்னவாசல் பெரிய குளம், புதூர் பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் நிரம்பி தண்ணீர் வெளியே செல்கிறது. இந்த குளங்களில் சிறுவர்கள், பொதுமக்கள் உற்சாகமாக குளித்து வருகின்றனர். தண்ணீர் செல்லும் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள் தூண்டில், பத்தக்கட்டை, வலை உள்ளிட்டவைகளை கொண்டு மீன் பிடித்து வருகின்றனர்.

திருமயம்

விராச்சிலை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 100 ஏக்கரில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொண்டனர். தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் சேதம் அடைந்தது. எனவே சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

திருமயம் பகுதியில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதையடுத்து, ஊராட்சி பணியாளர்கள் சாலைகளில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றினர்.

கறம்பக்குடி

கறம்பக்குடி நரிக்குறவர் காலனி, அக்ரஹாரம், யூனியன் அலுவலக பின்புறம் ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். மேலும் கறம்பக்குடி, குழந்திரான்பட்டு, மழையூர், ரெகுநாதபுரம், திருமணஞ்சேரி, பல்லவராயன் பத்தை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. எனவே சேதமான விவசாய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவரங்குளம்

திருவரங்குளம் வட்டார பகுதிகளில் உள்ள கத்தக்குறிச்சி, நம்பு குளி, மணியம்பலம், கிங்கினி பட்டி, திருவுடையார்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்து உள்ளனர். தற்போது பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அரிமளம்

அரிமளம் ஒன்றியம் கடையக்குடி, நம்பம்பட்டி, கே.புதுப்பட்டி, மேல்நிலைவயல், மேல்நிலைப்பட்டி, அய்யனார்பட்டி, துறையூர், கீரணிப்பட்டி, தாஞ்சூர், காமாட்சிபுரம், பெருங்குடி, வடக்குப்பட்டி, கூத்தம்பட்டி, பாப்பம்பட்டி, ஓணாங்குடி, ராயவரம், செங்கீரை, ஆயிங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையால் வயல்வெளிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. தண்ணீர் வடிந்த பிறகு பயிர்களை அறுவடை செய்தாலும் நெற்கதிர்கள் அனைத்தும் முளைத்து விடும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

வடகாடு

வடகாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான மாங்காடு, புள்ளான்விடுதி, அனவயல், நெடுவாசல், பவளத்தால்புரம், கீழாத்தூர், ஆலங்காடு, வெள்ளாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. ஆனால் மழை நீர் செல்ல வரத்து வாரிகள் இல்லாததால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். மேலும் வடகாடு, நெடுவாசல், வளத்தால்புரம் பகுதிகளில் 500 ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்தன. இதேபோல் கடலை, உளுந்து உள்ளிட்ட சாகுபடி பயிர்களும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பயிர்கள் வேர் அழுகும் சூழல் நிலவி வருகிறது.

காரையூர், அறந்தாங்கி

காரையூர் சுற்று வட்டார பகுதிகளான ஒலியமங்கலம், மேலத்தானியம், கீழத்தானியம், சடையம்பட்டி, மறவாமதுரை, அரசமலை, எம்.உசிலம்பட்டி, சூரப்பட்டி ஆகிய பகுதிகளில் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு மூலம் ஏராளமான விவசாயிகள் நெற்பயிர்களை பயிரிட்டு உள்ளனர். தற்போது ஒரு சில பகுதிகளில் அறுவடை செய்ய தயாராக இருந்த நெற்பயிர்கள் தொடர் மழையினால் சேதம் அடைந்தது.

அறந்தாங்கி அருகே மன்னக்குடி கிராமத்தில் பெய்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments