பிளஸ்-1 பொதுத்தேர்வு நடக்குமா? இல்லையா? மாணவர்கள் குழப்பம்
10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தேர்வு நடத்த முடியாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு தேர்வு நடத்துவதற்கான முயற்சியில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதற்கேற்றாற்போல், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கும் ஒப்புதல் கிடைத்து, அதற்கான பணிகளும் முழு மூச்சில் நடந்து வருகிறது. இப்படி இருக்கும் சூழ்நிலையில், 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதன்படி, அந்த மாணவர்களுக்கான முதல் மற்றும் 2-ம் திருப்புதல் தேர்வு குறித்து வெளியிடப்பட்ட அட்டவணையில் கூட, 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டுமே தேதிகள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

அவ்வாறு பார்க்கும்போது பிளஸ்-1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லையா? என்ற பேச்சும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் இல்லம் தேடி கல்வி மையத்தை தொடங்கி வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவது உறுதி’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஆனால் இது பற்றி அரசு தேர்வுத்துறையிடம் கேட்டபோது, முழுமையான பதில் இல்லை. பொதுத்தேர்வு நடைபெறுவதாக இருந்தால், அந்த மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பிலும், பிளஸ்-1 பொதுத்தேர்வு இருக்கா? இல்லையா? என்ற குழப்பத்திலும் மாணவர்கள் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். இதனை கல்வித்துறை தெளிவுப்படுத்தவேண்டும் என்பதே கல்வியாளர்கள், பெற்றோரின் கோரிக்கையாக இருக்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments