தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியன்று புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகளானது ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையில் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் நேற்று முதல்கட்ட ஆலோசனையை முதல்வர் மேற்கொண்டார். இதையடுத்து கலைவாணர் அரங்கில் மருத்துவத்துறை, அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இன்று மீண்டும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் பொங்கல் பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இரவு நேர ஊரடங்கு, வழிபாட்டு தலங்களில் வார இறுதி நாட்களில் தடை உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக இறுதி முடிவுகள்எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அதிகரித்துவரும் கரோனாவைக் கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு என்பதால் வாரந்தோறும் சனிக்கிழமையன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

கடந்த இரண்டு வாரங்களாக ஒரு சனிக்கிழமை கிறிஸ்துமஸாகவும், அடுத்த சனிக்கிழமை புத்தாண்டு ஆகவும் வந்ததால் தடுப்பூசி போடுவதை அந்த வாரங்களில் ஞாயிற்றுக்கிழம என மாற்றினோம். இனி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.

பள்ளிகளைப் பொறுத்தவரை பள்ளி மாணவர்களுக்கு 33,60,000 பேருக்கு தடுப்பூசி போடவேண்டியுள்ளது. முதல்நாள் முதல்வர் தொடங்கிவைத்த உடனே 3 லட்சத்துக்கும் மேலே தடுப்பூசி போடப்பட்டது. நேற்று 5 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அநேகமாக இந்த 10 நாட்களில் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் பணி நிறைவு பெறும் பொறியியல் கல்லூரிகளில் 4 லட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள்.ஏற்கெனவே 44 சதவீதம் போடப்பட்டிருந்த நிலையில் இந்த வாரம் சிறப்பு முன்னெடுப்புப் பணிகளால் 57 சதவீதமாக உயர்ந்தது. இனிவரும் இப்பணிகளும் முழுமையடையும்.

பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான அறிவிப்புகள் அடுத்து வெளியாகும்.

இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments