ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டிபெண் அதிகாரியின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் பரப்பிய கல்லூரி மாணவர் கைதுபுதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது19). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வேளாண்மை துறையில் பணியாற்றும் ஒரு இளம்பெண் அதிகாரியின் இ-மெயில் முகவரியை மனோஜ்குமார் ‘ஹேக்’ செய்துள்ளார். அந்த இ-மெயில் முகவரியில் இருந்த அந்த இளம் பெண் அதிகாரியின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பணி சார்ந்த புகைப்படங்களை அவர் பதிவிறக்கம் செய்தார். மேலும் அந்த புகைப்படத்தை ‘மார்பிங்’ செய்து அதனை சமூகவலைத்தளத்தில் பரப்பிவிடுவதாகவும், அவ்வாறு பரப்பாமல் இருப்பதற்கு ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என கூறி இளம்பெண் அதிகாரியை மனோஜ்குமார் மிரட்டியிருக்கிறார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்தார்.

கல்லூரி மாணவர் கைது
இந்த நிலையில் இளம்பெண் அதிகாரியின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் மனோஜ்குமார் பரப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கல்லூரி மாணவரான மனோஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அதிர்ச்சியான தகவல் தெரியவந்தது. கல்லூரி மாணவரான அவர் சென்னையில் தங்கி படித்து வந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையானார். இதனால் அவருக்கு பணத்தேவை ஏற்பட்டுள்ளது. அதற்காக இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான அவரிடம் இருந்து 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இ-மெயிலில் ரகசிய குறியீட்டிற்கு செல்போன் எண் கொடுக்காதீங்க...

போலீசார் அறிவுரை

இ-மெயிலில் ரகசிய குறியீட்டிற்கு செல்போன் எண் கொடுக்காதீங்க...
இன்றைய தொழில்நுட்ப காலத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்தப்படியே உள்ளது. திருடர்கள், புதுசு, புதுசா யோசித்து தங்களது கைவரிசையை காட்டுகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டையில் இளம்பெண் அதிகாரியின் இ-மெயில் முகவரியை கல்லூரி மாணவர் ‘ஹேக்’ செய்து பணம் பறிக்க முயன்ற போது சிக்கினார். இதனால் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘‘இ-மெயில் முகவரியில் ரகசிய குறியீடாக (பாஸ்வேர்ட்) செல்போன் எண்ணை கொடுக்காதீர்கள். ஒரு செல்போன் எண்ணை வைத்து இ-மெயில் முகவரியில் நுழைந்து, ரகசிய குறியீடாக அதே செல்போன் எண்ணை அதில் குறிப்பிட்டால் எளிதாக ‘ஹேக்’ செய்து உள்ளே நுழைந்து, கான்டக்ட் லிஸ்டில் உள்ளவர்களின் விவரங்களை பார்க்க முடியும். மெயிலில் உள்ள மெசேஜ் அனைத்தையும் பார்த்துவிடுவார்கள். அதனால் ரகசிய குறியீடாக செல்போன் எண்ணை கொடுக்காதீர்கள். வேறொரு ரகசிய குறியீடு கொடுத்திருந்தாலும் அதனை அடிக்கடி மாற்றுங்கள். உங்களது இ-மெயில் முகவரியை வேறொரு கணினி அல்லது மொபைலில் பயன்படுத்தப்பட்டால் அதற்கு அலார்ட் மெசேஜ் வரக்கூடிய வசதியை பயன்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு அலார்ட் மெசேஜ் வந்தால் அதில் உடனடியாக கவனம் செலுத்தி மெயிலை மற்றவர்கள் யாரும் ஓபன் செய்ய முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுங்கள்’’ என்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments