புதுக்கோட்டையில் கல்வி அதிகாரி அலுவலகத்தில்ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டையில் கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஆசிரியர்கள் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று இரவு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்திய போது அதில் கலந்து கொண்டவர்கள் மீது 17 பி எனும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த அரசின் முதல்-அமைச்சர், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்தார். இதனால் மற்ற மாவட்டங்களில் பதவி உயர்வுக்கு பாதிப்பான ஆசிரியர்களுக்கு மீண்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதில் மொத்தம் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரியிடம் பல முறை எடுத்துக்கூறியும் நடவடிக்கை இல்லை. அவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட ஆணை பிறப்பிக்க வேண்டும்’’ என்றனர். இதனை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்கள்
கல்வி அதிகாரியின் அலுவலகத்தில் உள்ளே ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போது கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜீவன்ராஜ் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தின் போது மற்றொரு அறையில் கல்வி அதிகாரி மஞ்சுளா மற்றும் அதிகாரிகள் உள்ளே அமர்ந்திருந்தனர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments