அறந்தாங்கி அருகே பரிதாபம்:குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே திருநாளூர் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் கற்பூரசுந்தரேஷ்வர பாண்டி. இவரது மனைவி சுந்தரி. இவர்களது மகன்கள் நிவிஸ் பாண்டி (வயது 6), வித்திஸ் பாண்டி (4). கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 2 குழந்தைகளும் கற்பூரசுந்தரேஷ்வரபாண்டி மற்றும் அவரது தம்பி, தாய் ஆகியோர் பராமரிப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கற்பூரசுந்தரேஷ்வரபாண்டியின் தம்பி செல்லபாண்டி வீட்டிற்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்று உள்ளார். 

இதைப்பார்த்த நிவிஸ் பாண்டி, வித்திஸ் பாண்டி ஆகிய இருவரும் அவருக்கு பின்னால் வந்துள்ளனர். இதைப்பார்த்த செல்லபாண்டி 2 சிறுவர்களையும் வீட்டிற்கு போக சொல்லி விட்டு அவர் குளித்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து 2 சிறுவர்கள் எங்கே என்று விசாரித்தார். அப்போது தான் அவர்கள் வீட்டிற்கு வர வில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து செல்லபாண்டி மற்றும் அவரது உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தும் சிறுவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.


சிறுவர்கள் உடல் மீட்பு 
இந்நிலையில் நேற்று அந்த குளத்தில் பொதுமக்கள் குளிக்க சென்றபோது 2 சிறுவர்களின் உடல்கள் குளத்தில் மிதந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சிறுவர்களின் உறவினர்கள் சிறுவர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். 2 சிறுவர்களும் குளத்தில் குளிக்கும் போது மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.  இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் 2 சிறுவர்களும் குளத்தில் மூழ்கி இறந்தார்களா? அல்லது யாரும் கொலை செய்து குளத்தில் வீசி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments