தொண்டி தனியார் விடுதியில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.



ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள தனியார் விடுதியில் கொள்ளை கும்பல் 3 அறைகள் எடுத்து தங்கியுள்ளதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் அந்த விடுதிக்கு அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு சிவகங்கை மாவட்டம் மங்களம் கிராமத்தை சேர்ந்த பூமி(வயது 49), தேவகோட்டை மாத்தூர் இலுப்பக்குடியை சேர்ந்த பழனிசாமி(45), காரைக்குடி அழப்பாபுரம் சண்முகநாதன்(44), காரைக்குடி நென்மேனி மனோஜ்குமார்(22), தேவகோட்டை விஸ்வநாதன்(20), மாத்தூர் நிரேஜ்(20), இலுப்பகுடி தோட்டக்காது நிதிஷ்குமார் (21), அதே ஊரைச் சேர்ந்த சிவகணேசன்(19) மற்றும் ஒரு சிறுவன் உள்பட 9 பேர் தங்கியிருந்தனர். 

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனால் அவர்கள் இருந்த அறை மற்றும் அவர்களது பைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர்களிடம் வீச்சரிவாள்கள், கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. 

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பூமி என்பவர் மீது கொலை மற்றும் 10-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.  

அவர் உள்பட 4 பேர் மீது காரைக்குடி மற்றும் சாகோட்டை போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 9 பேரும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். 

அவர்கள் ஆயுதங்களுடன் லாட்ஜில் தங்கியிருந்ததால் ஏதாவது சதித்திட்டத்தை அரங்கேற்றுவதற்காகத்தான் வந்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். அவர்கள் எதற்காக ஆயுதங்களுடன் லாட்ஜில் பதுங்கி இருந்தார்கள்? என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கர ஆயுதங்களுடன் 9 பேர் கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் தொண்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது-. 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments