புதுக்கோட்டையில் மொபட் விபத்தில் காயமடைந்தவர் திடீர் பலி:தவறான ஊசி செலுத்தியதால் இறந்ததாக அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் புகார் உடலை வாங்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு


புதுக்கோட்டை அருகே மொபட் விபத்தில் காயமடைந்தவர் திடீரென இறந்தார். தவறான ஊசியை செலுத்தியதால் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தின் மீது உறவினர்கள் புகார் தெரிவித்து உடலை வாங்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தில் காயம்
புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் பகுதியை சேர்ந்த பெருமாளின் மகன் முருகேசன் (வயது 27). இவர் தள்ளுவண்டியில் வளையல் வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மொபட்டில் ஆதனக்கோட்டை அருகே சோழகம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு நாய் குறுக்கே வந்துள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முருகேசனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன்பின் அவர் நலமாக இருந்துள்ளார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை 9 மணி அளவில் தனது உறவினர்கள், குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார். அதன்பின் அவருக்கு சிகிச்சைக்கான ஒரு ஊசி செலுத்தப்பட்டிருக்கிறது. இதில் சிறிது நேரத்திற்கு பின் முருகேசன் திடீரென இறந்தார். இதனால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தர்ணா போராட்டம்

நல்ல முறையில் பேசிக்கொண்டிருந்தவருக்கு தவறான ஊசியை செலுத்தியதால் முருகேசன் இறந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இறந்த முருகேசனின் உடலை கண்டு அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். உடலை வாங்கி செல்லாமல் வளாகத்தில் வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
 
 இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ், இன்ஸ்பெக்டர்கள் குருநாதன் (டவுன்), முகமது ஜாபர் (கணேஷ்நகர்) மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இறந்த முருகேசனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானமடையாததால் போராட்டம் தொடர்ந்து நீடித்தது. இதற்கிடையில் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனை செய்த பின் அதன் அறிக்கைப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும் பிரேத பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப்படும் எனவும் கூறினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானமடைந்தனர். அதன்பின் முருகேசனின் உடல் நேற்று மாலை 4 மணி அளவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்து வீடியோ பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் முருகேசனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் மாலை 5 மணிக்கு மேல் உடலை வாங்கி சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.

கண்ணாடி உடைப்பு
முன்னதாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவு நுழைவுவாயிலில் உள்ள கண்ணாடியில் ஒரு பகுதி உடைந்தது. போராட்டத்தின் போது தள்ளு-முள்ளுவில் கண்ணாடி உடைந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் முருகேசன் இறந்தது தொடர்பாக ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இறந்த முருகேசனுக்கு அழகாம்பிகை என்றச மனைவியும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. விபத்தில் காயமடைந்து அறுவை சிகிச்சைக்குபின் நல்ல முறையில் இருந்தவர் திடீரென இறந்ததால் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments