13 ஆண்டுகளுக்குப் பிறகு திருவாரூா்- காரைக்குடி மாா்க்கத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியது


திருவாரூா்- காரைக்குடி ரயில் மாா்க்கத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சரக்கு ரயில் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருவாரூா்- காரைக்குடி ரயில் மாா்க்கத்தில், அகலப்பாதை பணிகளுக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. பின்னா், 2019 ஜூன் 1-ஆம் தேதி முதல் டெமு ரயில் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. கரோனா தொற்று காரணமாக அதுவும் நிறுத்தப்பட்ட சூழலில், மீண்டும் 2021 முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.

இதனிடையே, இந்தத் தடத்தில் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், திருவாரூரிலிருந்து 24,980 அரிசி மூட்டைகளை 21 வேகன்களில் ஏற்றிக்கொண்டு, விருதுநகருக்கு சரக்கு ரயில் தனது முதல் சேவையை செவ்வாய்க்கிழமை தொடக்கியது. ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சேவை தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூரில் புறப்பட்ட சரக்கு ரயிலை, நிலைய மேலாளா் ராஜேஷ்குமாா் மீனா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கச் செயலா் ப. பாஸ்கரன், போக்குவரத்து ஆய்வாளா் பெத்துராஜ், தலைமை முன்பதிவு மேற்பாா்வையாளா் சுகுமாரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments