புதுக்கோட்டை மாவட்டத்தில் 34 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர் கலெக்டர் நேரில் பாராட்டு
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் புதுக்கோட்டையில் 34 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க அரசு சார்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 34 மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இதில் 25 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கும், 9 பேர் பல் மருத்துவப் படிப்பிற்கும் தேர்வாகியுள்ளனர். இதன்மூலம், அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் தமிழக அளவில் புதுக்கோட்டை மாவட்டம் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

 34 மாணவ-மாணவிகள் பெரும்பாலும் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். சாதாரண ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் படிக்கும் கனவு தற்போது நனவாகியுள்ளது.

மாணவர்களுக்கு பாராட்டு

மருத்துவ படிப்புக்கு தேர்வான மாணவ-மாணவிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அப்போது மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்பிற்கான சீருடையில் வெள்ளை நிற கோட்டு மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிந்தும் வந்திருந்தனர். மாணவர்களை பாராட்டி கலெக்டா் கவிதாராமு பேசியதாவது:-

 உங்கள் உழைப்பை கண்டு மாவட்ட நிர்வாகம் பெருமை கொள்கிறது. இதற்கு காரணமான மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சவால்கள்

மாணவர்கள் அனைவரும் தங்களது கல்லூரி படிப்பில் சிறந்து விளங்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நெகிழ்திறன் என்ற தன்னம்பிக்கை பயிற்சி மாவட்ட மனநல மருத்துவர்களால் வழங்கப்பட உள்ளது. எனவே, மாணவர்கள் அனைவரும் வருங்காலங்களிலும் இதுபோன்று சிறப்பான முறையில் செயல்பட்டு வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு வகையான சவால்களையும் எதிர்கொண்டு உங்களின் வெற்றி மற்றவர்களையும் வெற்றிப்பெற தூண்டும் வகையில் செயல்பட வேண்டுமென வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments