கோபாலப்பட்டிணத்தில் 750 பவுன் நகை கொள்ளை விவகாரம்: உறவினர்களே நகையை திருடிவிட்டு நாடகமாடியது அம்பலம் - இருவர் கைது!!   
மீமிசல் அருகே 750 பவுன் நகை கொள்ளை போன சம்பவத்தில் உறவினர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவர் புருனை நாட்டில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த டிசம்பர் 27-ந்தேதி இவரது வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் 750 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். தகவலறிந்த மீமிசல் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
 
மேலும் போலீஸ் எஸ்.பி. நிஷா பார்த்தீபன் நேரில் ஆய்வு மேற்க்கொண்டு குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி. டி.வி. காட்சிகள், உறவினர்கள், பழைய குற்றவாளிகள் என பல கோணங்களில் விசாரித்து வந்தனர்.

அப்போது உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கொள்ளைபோன வீட்டின் பின்பக்கத்தில் உள்ள கிணற்றில் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கிணற்றின் மேற்புறத்தில் மூடப்பட்டிருந்த கம்பி கதவு லேசாக திறந்திருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த போலீசார், உடனடியாக கிணற்றிலிருந்த தண்ணீரை வெளியேற்றிப் பார்த்தனர்.

இதில் காணாமல் போன தங்கநகைகள் மூட்டையாக கட்டி கிணற்றுக்குள் கிடந்தது தெரிய வந்தது. அதனை மீட்டு நகை மதிப்பீட்டாளர்கள் முன்னிலையில் எடை போட்டதில் 559 சவரன் நகை இருப்பது தெரிய வந்தது.ஏற்கனவே 750 சவரன் கொள்ளை போனதாக புகார் அளித்துள்ள நிலையில் 559 சவரன் நகை மட்டுமே கிடைத்தது.

அந்த நகையை கைப்பற்றிய போலீசார் காணாமல் போன நகை எவ்வாறு கிணற்றுக்குள் வந்தது, மீதி நகை எங்குள்ளது என்ற பல்வேறு கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் ஜாபர் சாதிக்கின் உறவினரான கமருஜமான் மற்றும் அசாருதீன் ஆகியோர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திருடர்கள் போலே உள்ளே நுழைந்து நகையை திருடியிருப்பது தெரிந்தது.

இது குறித்து போலீசாரிடம் கமருஜமான் அளித்த வாக்குமூலத்தில், தானும் வெளிநாட்டில் வேலை செய்து வந்ததாகவும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஊருக்கு வந்தபோது, ஜாபர் சாதிக்கின் வீட்டில் நகைகள் இருப்பது தெரிந்து, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகையை திருடிச் சென்றேன்.


மேலும் திருடிய நகைகளை எடுத்துக்கொண்டு சென்னையில் 2 நாட்கள் தங்கிவிட்டு பின்பு வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வருவதுபோல் வந்தேன். ஆனால் போலீசார் என்னை நெருங்குவதை உணர்ந்த நான், பயத்தில் திருடிய நகையை வீட்டின் பின் பக்கத்தில் உள்ள கிணற்றில் போட்டேன் என ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து கமருஜமான் மற்றும் உடந்தையாக இருந்த அசாருதீன் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 9 பவுன் நகை மீட்ட போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு இருவரையும் சிறையில் அடைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments