புதுக்கோட்டையில் எல்இடி திரையில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம்  மாவட்ட தேர்தல் பார்வையாளர் டாக்டர்.மோனிகா ராணா, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் அதிநவீன எல்இடி வீடியோ வாகனம் மூலம் விளம்பர பணிகள் மேற்கொள்ளப்படுவதை நேற்று பார்வையிட்டனர்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி வேட்புமனு தாக்கல் நிறைவுப்பெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் தயார் செய்யப்பட்டு, சமூக ஊடகம், தொலைக்காட்சிகள் உள்ளிட்டவைகள் மூலமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன.மேலும் இக்குறும்படங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் தேர்தல் நடைபெறும் 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்துநிலையங்கள், கடைவீதிகள், உழவர் சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனம் மூலம் விளம்பர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்குறும்படத்தில் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது குறித்தும், நேர்மையான முறையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பது குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ள குறும்படங்கள் பிப்.7 முதல் 18ம்தேதி வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் திரையிடப்படவுள்ளது.
இந்நிகழ்வில் டிஆர்ஓ செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments