ஆலங்குடி அருகே பள்ளிக்கு சென்ற மாணவன் திடீர் மரணம்





புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி பகுதியை சேர்ந்தவர் நாடிமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகன் நித்தீஸ்குமார் (வயது 9). இவர், பாப்பான் விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல நேற்று பள்ளிக்கு சென்ற மாணவன், உணவு இடைவேளைக்குப்பின் பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் கழிவறைக்கு சென்றுள்ளார். பின்னர் வகுப்பறை திரும்பியபோது மயக்கம் வருவதாக ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் தெரிவிக்க மாணவனின் தந்தையை செல்போன் மூலம் ஆசிரியர் தொடர்பு கொண்டார். அப்போது நாடிமுத்து தானும், மனைவியும் வேலைக்கு சென்றுள்ளதால் பிள்ளையை வீட்டில் கொண்டுபோய் விடுமாறு கேட்டுக் கொண்டதால் மாணவனை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீட்டில் சென்று ஆசிரியர் விட்டுள்ளார்.

மரணம்

 அங்கிருந்தவர்கள் மாணவனை ஆலங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நித்தீஸ்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர், மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவனின் உறவினர்கள் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், மாணவனின் திடீர் சாவுக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகே மாணவனின் சாவுக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments