செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் ஆத்திரம்: வகுப்பறையில் ஆசிரியருக்கு சரமாரி கத்திக்குத்து; மாணவர் கைது

செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் வகுப்பறையில் ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர் கைது செய்யப்பட்டார்.

செல்போனில் விளையாட்டு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ேதவகோட்டை பகுதியை சேர்ந்த 18 வயது மாணவர் எந்திரவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இங்கு காரைக்குடி பழனிச்சாமி நகரை சேர்ந்த ராஜா ஆனந்த் (வயது 48) ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் இவர் வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

ஆனால் சம்பந்தப்பட்ட மாணவர் வகுப்பறையில் பாடத்தை கவனிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த ஆசிரியர், மாணவரை கண்டித்துள்ளார். ஆனாலும் மாணவன் தொடர்ந்து செல்போனில் விளையாடியதாக தெரிகிறது. இதனால் ஆசிரியர், மாணவன் பற்றி தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

கண்டித்த தாயார்

இதையடுத்து அந்த மாணவரை அழைத்த முதல்வர், அவனது பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து மாணவர், தாயாரை அழைத்து வந்துள்ளான். அப்போது, உங்கள் மகன் பாடங்களை கவனிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். இதனால் மற்ற மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. எனவே நீங்கள் மாற்றுச்சான்றிதழை வாங்கி சென்று விடுங்கள் என்று முதல்வரும், ஆசிரியரும் கூறியுள்ளனர்.

இதைதொடர்ந்து மகனை கண்டிப்பதாக அவர் கூறினார். அப்போது இது தான் கடைசி முறை, இனி தவறு செய்தால் மன்னிக்க மாட்டோம் என அவர்கள் கூறினர்.

வகுப்புக்கு வந்த மாணவர்

அதன்பின் நேற்று காலை தொழிற்பயிற்சி நிலையத்தில் வகுப்புகள் வழக்கம்போல் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அந்த மாணவரும் வழக்கம்போல் வகுப்பிற்கு வந்துள்ளான். ஓவிய ஆசிரியர் ராஜா ஆனந்த், வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார். அருகில் மற்ற வகுப்புகள் நடந்து கொண்டு இருந்தன.

அப்போது அங்கு சென்ற மாணவர் ஓவிய ஆசிரியரிடம் நான் தவறுதலாக நடந்து கொண்டேன் என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்வேன் என்று கூறியுள்ளான். அதற்கு ஆசிரியர் எதுவாக இருந்தாலும் முதல்வரிடம் சென்று பேசுமாறு கூறியுள்ளார்.

கத்திக்குத்து

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை சரமாரியாக குத்தினான். இதனால் அலறியவாறு ரத்தம் சொட்டச்சொட்ட அவர் கீழே விழுந்தார்.

அவரது சத்தம் ேகட்டு பக்கத்து வகுப்புகளில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் ஓடிவந்து மாணவரை பிடித்துக்கொண்டனர். படுகாயம் அடைந்த ஆசிரியர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை கைது செய்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments