உக்ரைன் மீது ரஷியா போர்: தாக்குதலை உடனே நிறுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தல்




உக்ரைன் நாட்டின் மீது நேற்று ரஷியா போர் தொடுத்தது. சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் காரணமாக உக்ரைன் நிலைகுலைந்து போய் உள்ளது.

உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும், ஒரே நாளில் உக்ரைன் நாட்டின் மீது திரும்பி இருக்கிறது.

உக்ரைன் மீது ரஷியா போர்

எது நடக்கக்கூடாது என்று உலக நாடுகளும், மக்களும் எதிர்பார்த்தனரோ அது நடந்து விட்டது. உக்ரைன் மீது ரஷியா நேற்று போரைத் தொடங்கி விட்டது. இந்தப் போருக்கான பின்னணி என்ன என்ற கேள்வி மக்களிடம் எழுவது இயல்பு.



சோவியத் யூனியன் சிதறியபோது பிரிந்து வந்து தனிநாடாக விளங்குகிற உக்ரைனில் இருந்து கிரிமியா தீபகற்பத்தை, 2014-ம் ஆண்டு ரஷியா தன்னோடு இணைத்துக்கொண்டது.

அதுமட்டுமின்றி கிழக்கு உக்ரைனில் முக்கிய பகுதிகளை கைவசமாக வைத்துள்ள உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கு ரஷியா உதவிக்கரம் நீட்டியது. அவர்களின் துணையுடன் உக்ரைனை வசப்படுத்தி விடலாம் என்பதுதான் ரஷியாவின் கணக்கு ஆகும்.

ஆனால் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்ந்து பாதுகாப்பு தேடிக்கொள்ள நினைத்தது. அவ்வாறு உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைந்தால் தனக்கு அது அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷியா எண்ணியது.

ரஷியா அங்கீகாரம்

இந்த சூழலில் தடாலடியாக உக்ரைன் எல்லையில் 1½ லட்சம் படை வீரர்களையும், போர்த்தளவாடங்களையும் ரஷியா குவித்தது. ஆனாலும் உக்ரைன் மீது போர் தொடுக்க மாட்டோம் என்று ரஷியா தொடர்ந்து கூறி வந்தது. அதை மறுத்த அமெரிக்காவோ, உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷியா போர் தொடுப்பது நிச்சயம் என்று கூறி வந்தது.

இதனால் உக்ரைனும், அங்கு வாழ்கிற மக்களும் ஒவ்வொரு நாளையும் பதற்றத்தின் பிடியில் கழித்தனர். ஒவ்வொரு இரவும் கவலைசூழ் இரவாக அமைந்தது. இந்த சூழ்நிலையில், உக்ரைனின் லுகான்ஸ்க் மற்றும் டன்ஸ்ட்க் பிராந்தியங்களை தனி நாடுகளாக அங்கீகரித்து ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு வெளியிட்டார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதம்

அது ரஷிய படைகள் அங்கிருந்து உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்க வசதியாகப்போய் விட்டது. இது கிட்டத்தட்ட போரை மறைமுகமாக உறுதி செய்தது.

இந்த தருணத்தில் நேற்று முன்தினம் இரவில், உக்ரைன் மீதான ரஷியப் போரை தடுத்து நிறுத்துவது குறித்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடி விவாதித்துக்கொண்டிருந்தது.

போரை அறிவித்தார், புதின்

அந்த நேரத்தில், “உக்ரைனின் டான்பாஸ் பிரிவினைவாதப்பகுதி மக்களைப் பாதுகாக்க ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன்” என்று கூறி ரஷிய அதிபர் புதின் அதிரடியாக போர் பிரகடனம் செய்தார். அப்போது மாஸ்கோ நேரம், நேற்று அதிகாலை 5.55 மணி.

அத்துடன், “வெளியில் இருந்து இந்தப் போரில் எந்த நாடாவது தலையிட நினைத்தால், அந்த நாடு வரலாற்றில் சந்தித்ததைவிட பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்தார்.

ஏவுகணை தாக்குதல், குண்டு மழை

அடுத்த சில நிமிடங்களில் ரஷிய படைகள், உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலை தொடங்கின. அதன் முக்கிய அம்சங்கள்:-

* கீவ், கார்கிவ், டினிப்ரோ நகரங்களில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதலை தொடங்கியது.

* பல நகரங்களில் ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.

* கீவ் பிராந்தியத்தின் வடக்கே ரஷிய படைகள் புகுந்தன. ஒடேசா பகுதியில் ரஷியா நடத்திய தாக்குதலில் மட்டும் 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

* கீவ் நகரை அடுத்துள்ள புரோவாரி நகரில் தொடர்ந்து ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

* கீவ், கார்கிவ், ஒடேசா மற்றும் பிற நகரங்களில் தொடர்ந்து குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாகவும், பொதுமக்களை உஷார்படுத்த சைரன்கள் ஒலித்துக்கொண்டே இருந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழப்பு

* பிற்பகலில் கீவ் நகருக்கு சற்று வெளியே ஹோஸ்டோமலில் உள்ள ஆண்டனோவ் சர்வதேச விமான நிலையத்தின்மீது ரஷியா கடுமையான வான்தாக்குதலை நடத்தியது. அங்கு ரஷியாவின் எம்.ஐ. 8 ரக ஹெலிகாப்டர்கள் டஜன்கணக்கில் செயல்பட்டதை வீடியோ காட்சிகள் காட்டின.

* ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைனின் 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்கச்செய்யப்பட்டன. இவற்றில் விமானப்படையின் 11 விமான நிலையங்கள், 3 கட்டளை சாவடிகள், கடற்படைகளுக்கான அடிப்படை மையம், வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளின் 18 ரேடார் நிலையங்கள் அடங்கும்.

* மத்திய கீவ் பகுதியில் அமைந்துள்ள ராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகமும் ரஷியாவின் தாக்குதலுக்கு தப்பவில்லை.

* நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

* உக்ரைன் ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 5 பேர் கொல்லப்பட்டனர். கீவ் நகர் அருகே 14 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது.

மொத்த பலி எவ்வளவு?

* நேற்றைய தாக்குதல்களில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 68 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று கூறியது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ரஷிய தரப்பில் சேதமே இல்லையா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறது. ரஷியாவின் 2 ஹெலிகாப்டர்களை உக்ரைன் படையினர் வீழ்த்தினர். 2 ரஷிய துருப்புகளை உக்ரைன் ராணுவம் சிறைப்பிடித்தும் இருக்கிறது.

* தலைநகரம் கீவ் உள்பட எங்கு பார்த்தாலும் ஏவுகணை தாக்குதலும், குண்டுமழையும் ஒரு சேரப்பொழிந்து வருவதால் உக்ரைன் மக்கள், தங்கள் உயிரைக்காக்க பரிதவித்தவாறு வெளியேறத்தொடங்கி இருப்பது மானுட சோகம்.

* ரஷிய தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அந்த நாட்டில் ராணுவ சட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு திரட்டி வருவதாகவும், மக்கள் வீடுகளிலே இருக்குமாறும், பீதி அடைய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

* இதற்கிடையே உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலில் பெலாரஸ் பங்கேற்கக்கூடாது என ஐரோப்பிய யூனியன் தலைவர் சார்லஸ் மைக்கேல் கேட்டுக்கொண்டார்.

ஜோ பைடன் அவசர ஆலோசனை

உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் மற்றும் நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் என உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை அவசரமாக கூட்டி உக்ரைன் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தனை பரபரப்புக்கு மத்தியில் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கூறும்போது, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் நட்பு நாடுகள் கூட்டணியின் கிழக்குப்பகுதிக்கு ஏற்கனவே ஆயிரக்கணக்கான படை வீரர்களை அனுப்பி நிலைநிறுத்தி இருப்பதாகவும், மேலும் பலர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சூளுரை

மேலும், ‘‘எங்கள் வான்வெளியைப் பாதுகாக்கும் வகையில் 100-க்கும் மேற்பட்ட ஜெட் விமானங்களும், வடக்கிலிருந்து மத்திய தரைக்கடல் வரையில் 120-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளின் கப்பல்களும் உள்ளன. கூட்டணியை ஆக்கிரமிப்பில் இருந்து காப்பதற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம்’’ என அவர் சூளுரைத்தார். இன்று நேட்டோ நாடுகளின் தலைவர்களின் காணொலிக்காட்சி கூட்டம் நடக்கிறது. இதில் அடுத்தகட்ட நடவடிக்கை முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைனில் நேற்றைய தாக்குதல், ஏறத்தாழ 80 ஆண்டுகளில் ஐரோப்பாவின் இருண்ட நேரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்று ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு கொள்கை தலைவர் ஜோசப் போரல் தெரிவித்தார்.

போரை நிறுத்த வேண்டுகோள்

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் போரின் பெயரால் படைவீரர்களும், மக்களும் கொன்று குவிக்கப்படுவது ஒட்டுமொத்த மனித குலத்துக்கே மாபெரும் சவாலாக அமைந்துள்ளது.

அதனால் ரஷியா போரை நிறுத்தி, தூதரக ரீதியில் சமாதான தீர்வை நாட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் கேட்டுக்கொண்டுள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments