தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 22 பேர் கைது

நாகை கீச்சாங்குப்பம் சேவாபாரதி பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 34). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை(60), சிவபாரதி(27), சவுந்தர்ராஜன்(34), நாகை நம்பியார் நகரை சேர்ந்த பிரகாஷ்(35), செல்வம்(45), அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்வநாதன்(29), ரெத்தினசாமி(34), சந்திரபாடியை சேர்ந்த அய்யப்பன்(40), முருகேசன்(55) ஆகிய 9 மீனவர்கள் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி(35). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், காரைக்காலை சேர்ந்த செல்வமணி(45), ரமேஷ்(34), திலீபன்(17), சுரேஷ்(34) என 5 பேரும், நாகையை சேர்ந்த கோகுல்(21), கிஷோர்(20), ஆறுமுகசாமி(58), சத்தியநாதன்(22), இளவரசன்(23), மயிலாடுதுறையை சேர்ந்த நவீன்குமார்(27), பால் மணி(32), கவியரசன்(24) ஆகிய 8 மீனவர்களும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் மாலையில் கோடியக்கரையின் தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி நாகை, காரைக்கால் மீனவர்கள் 22 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் மீனவர்கள் 22 பேரையும் இலங்கை யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம், இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து நாகை, காரைக்கால் மீனவர்களை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments