தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே கடலில் தொடர்ந்து 18 மணி நேரம் நீந்தி சாதித்த பெங்களூரு பெண்..




இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரையிலான சுமார் 26 கிலோ மீட்டர் தூர கடல் பகுதியை பலர் நீந்தி கடந்துள்ளனர்.

இந்த சாதனையை படைப்பதில் பலர் ஆர்வம் காட்டியும் வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த பேச்சுத்திறனற்ற சிறுமி, இந்த சாதனையை நிகழ்த்திய நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்த சுச்சேத்தா (வயது 38) என்ற பெண்ணும் நேற்று இந்த சாதனையை படைத்தார்.

அதாவது தனுஷ்கோடி பகுதியில் இருந்து தலைமன்னார் வரையிலும் நீந்தி சென்றுவிட்டு, மீண்டும் தலை மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் தொடர்ந்து நீந்தி, உலக சாதனை செய்ய திட்டமிட்டு இருந்தார்.

இதற்காக நேற்று முன்தினம் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதியில் இருந்து காலை 8.20 மணிக்கு தலைமன்னாரை நோக்கி நீந்த தொடங்கினார். மாலை 6.25 மணிக்கு தலைமன்னார் பகுதியை அடைந்த அவர், மீண்டும் தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி நோக்கி நீந்திவர முயன்றார்.

கடல் சீற்றம்

ஆனால் கடல் சீற்றத்தால் நடுக்கடலில் இந்திய எல்லை வரை மட்டுமே அவரால் நீந்தி வர முடிந்தது.

உடனே அவரது பாதுகாப்புக்காக சென்றிருந்த படகில் ஏறி நேற்று காலை 6 மணி அளவில் தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினார். இதுகுறித்து நீச்சல் வீராங்கனை சுச்சேத்தா கூறியதாவது:-

தனுஷ்கோடி பகுதியில் இருந்து தலைமன்னார் வரையிலும், மீண்டும் தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் 52 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை செய்ய திட்டமிட்டு இருந்தேன். செல்லும் போது சுமார் 26 கிலோ மீட்டர் தூர கடல் பகுதியை 10 மணி நேரம் 5 நிமிடத்தில் கடந்து விட்டு மீண்டும் உடனே அங்கிருந்து தனுஷ்கோடி நோக்கி நீச்சலடித்து நோக்கி வந்தேன். அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கஷ்டப்பட்டேன்.

ஜெல்லி மீன்கள்

மேலும் ஜெல்லி மீன்கள் உடல் முழுவதும் தாக்கியதாலும் தோள்பட்டை வலியாலும் அதிகாலை 2.10 மணிக்கு இந்திய கடல் எல்லைப் பகுதி வரை மட்டுமே நீந்த முடிந்தது. அதன்பிறகு படகில் ஏறி தனுஷ்கோடி வந்து இறங்கினேன். திட்டமிட்ட 52 கிலோ மீட்டர் தூரத்தில் கிட்டத்தட்ட 42 கிலோமீட்டர் தூர கடல் பகுதியை 18 மணிநேரத்தில் கடந்துவிட்டேன். இந்த சாதனையை செய்திருந்தாலும் திட்டமிட்டபடி முழுமையாக எனது சாதனை பயணத்தை நிறைவு செய்யாதது சிறிது வருத்தமாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments