புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சிகளில்69 வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்றனர்புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சிகளில் 69 வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்றனர். தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

கவுன்சிலர்கள் பதவியேற்பு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ந் தேதியும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. 

இதற்காக விழா பந்தல் மேடை அமைக்கப்பட்டிருந்தது. தி.மு.க.வில் வெற்றி பெற்ற 24 கவுன்சிலர்கள், 3 காங்கிரஸ் கவுன்சிலர்கள், 8 அ.தி.மு.க. கவுன்சிலர்கள், அ.ம.மு.க. கவுன்சிலர் ஒருவரும், விஜய் மக்கள் இயக்க கவுன்சிலர் ஒருவரும், 5 சுயேச்சைகளும் பதவி ஏற்றனர். கவுன்சிலர்களுக்கு நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான நாகராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

போலீஸ் பாதுகாப்பு
பதவியேற்பு விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், முத்துராஜா எம்.எல்.ஏ., காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் ராயல் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஒரு கவுன்சிலர்களுடன் 4 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக நகராட்சி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. 

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செரீனாபேகம் தலைமையில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ், இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கவுன்சிலர்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களை மட்டும் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். இருப்பினும் விழா தொடங்கிய பின் அதிகம் பேர் வந்தனர்.

நாளை தலைவர் தேர்தல்
பதவியேற்ற கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த போது அவர்களது ஆதரவாளர்கள் மாலை, சால்வை அணிவித்து வரவேற்றனர். நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற உள்ளது. நகராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை மதியம் நடைபெற உள்ளது. 

தலைவர் பொதுப்பிரிவில் பெண்ணும், துணை தலைவர் பதவியில் ஆணும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த 2 பதவிகளுக்கும் கவுன்சிலர்கள் வாக்களிக்கப்பார்கள். தி.மு.க.வில் 24 கவுன்சிலர்களும், கூட்டணி கட்சியான காங்கிரசில் 3 கவுன்சிலர்களும் உள்ளனர். இதுதவிர சுயேச்சைகளில் தி.மு.க. ஆதரவாளர்கள் 3 பேர் உள்ளனர். இதனால் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை தி.மு.க.வே கைப்பற்றுகிறது.

அறந்தாங்கி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு விழா அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் தி.மு.க. கவுன்சிலர்கள் 15 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேரும், ம.தி.மு.க. கவுன்சிலர் ஒருவரும், விடுதலை  சிறுத்தைகள் கவுன்சிலர் ஒருவரும், தே.மு.தி.க. கவுன்சிலர் ஒருவரும், காங்கிரஸ் கவுன்சிலர்கள் 3 பேரும், சுயேச்சை கவுன்சிலர்கள் 3 பேரும் என மொத்தம் 27 பேரும் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர். கவுன்சிலர்கள் 27 பேருக்கும் நகராட்சி ஆணையர் லீனா சைமன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments