புதுக்கோட்டை நகர்மன்ற தலைவராக திலகவதி செந்தில்குமார்(தி.மு.க.) -ம் அறந்தாங்கி நகர்மன்ற தலைவராக ஆனந்த் (தி.மு.க.) போட்டியின்றி தேர்வு!!




புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகராட்சியில் மொத்தமுள்ள 42 வார்டுகளில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கடந்த 2-ந் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தோ்தல் நேற்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் 25-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திலகவதி செந்தில்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். 

இந்தநிலையில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நகர்மன்ற கூட்டரங்கில் நேற்று காலை நடைபெற்றது. இதில், கவுன்சிலர்களை தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மொத்தம் 35 கவுன்சிலர்கள் கூட்டரங்கிற்கு வந்திருந்தனர். அவர்களிடம் நகராட்சி அலுவலர்கள் கையெழுத்து பெற்றனர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை.

 தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் திலகவதி செந்தில்குமார் போட்டியின்றி தேர்வானதாக நகராட்சி ஆணையர் நாகராஜன் அறிவித்தார். அதற்கான சான்றிதழையும் அவர் வழங்கினார். இதைத்தொடர்ந்து நகராட்சி தலைவர் இருக்கையில் திலகவதி செந்தில்குமார் அமர்ந்தார். அவருக்கு முத்துராஜா எம்.எல்.ஏ. மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். 

துணைத்தலைவர் தேர்தல்
அதன்பின்னர் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மதியம் 2.30 மணிக்கு நடைபெற்றது. இதில், தி.மு.க. சார்பில் 17-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லியாகத்அலி போட்டியிட்டார். துணை தலைவர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் லியாகத் அலி போட்டியின்றி தேர்வானதாக நகராட்சி ஆணையர் நாகராஜன் அறிவித்தார். அவருக்கு கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர், கூட்டணி கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

வாக்கு பெட்டி
நகராட்சி தலைவர், துணை தலைவர் பதவிக்கு தி.மு.க.வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வானதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். நகராட்சி தலைவர், துணை தலைவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைகள் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. மறைமுக தேர்தலில் போட்டி ஏற்பட்டதால் வாக்குப்பதிவு நடத்த தேர்தல் அதிகாரிகள் தயாராக வாக்கு பெட்டிகள் மற்றும் வாக்களிக்க வசதியாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆனால் போட்டி ஏற்படாததால் அதற்கு வேலையில்லாமல் போனது. புதுக்கோட்டை நகராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்வான நிலையில் நகர்மன்றத்தின் முதல் கூட்டம் எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

போலீஸ் பாதுகாப்பு
முன்னதாக தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலையொட்டி நகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகராட்சி அலுவலகத்தில் 100 மீட்டர் தொலைவுக்கு முன்னதாகவே இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது

அறந்தாங்கி
அறந்தாங்கி நகராட்சியில்  27 வார்டுகள் உள்ளன. இதில் 8-வது வார்டில் வெற்றி பெற்ற ஆனந்த் (தி.மு.க.) தலைவர் பதவிக்கு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தார். இதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ஆனந்த் போட்டியின்றி நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதேபோல, நகர்மன்ற துணைத் தலைவராக 6-வது வார்டில் வெற்றி பெற்ற முத்து (தி.மு.க.) போட்டியின்றி தேர்வானதாக நகராட்சி ஆணையர் லீனா சைமன் தெரிவித்தார். நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஆனந்த் கட்சியினருடன் நடந்து வந்து பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments