52 ஆண்டுகள் கடந்து பொன்விழா கண்ட கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸா..!
இன்றைய தலைமுறைக்கு GPM ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் வரலாறு பற்றி நினைவுப்படுத்துவதில் GPM மீடியா மகிழ்ச்சி அடைகிறது.

கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸா இன்றுடன் (08.03.1970 - 08.03.2022) 52-வது ஆண்டு பொன்விழாவை நிறைவு செய்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு சில வரலாறுகள் இன்றைய தலைமுறைக்கு தெரியாமலேயே மறைந்து விடுகிறது. அதனை சரியான முறையில் கொண்டு சேர்க்கும் விதமாக ஐம்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நமது ரஹ்மானியா பெண்கள் மதரஸா உருவான வரலாறு பற்றி இந்த செய்தி தொகுப்பு விவரிக்கிறது.
கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முஹம்மது இப்ராஹிம் அன்வாரி அவர்கள் கூறியுள்ள வரலாற்று பதிவுகள்:

இந்த பதிவின் மூலமாக GPM மீடியா வாசகர்கள் அனைவரையும் பூரண நலத்துடன் சந்திக்க துஆ செய்தவனாக இந்த வரலாற்றை பதிவு செய்கிறேன்.

நமது கோபாலப்பட்டிணத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் வரலாறு பற்றி உங்களுக்கு விவரிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

ரஹ்மானியா பெண்கள் மதரஸா ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 52-ஆண்டுகள் (08.03.1970-08.03.2022) நிறைவடைகிறது. அல்ஹம்துலில்லாஹ்.. 1970-வதுக்கு முன்னர் பெண் குழந்தைகளுக்கு குர்ஆன் பாடசாலை, பெண்கள் தொழுவதற்கு என தனியான இடம் ஏதும் இல்லை. அன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகள் ஆங்கங்கே ஒரு சில வீடுகளுக்கு சென்று குர்ஆனை ஓதி வந்தனர். மேலும் பெண்களுக்கான தொழுகை கல்லுக்குளம் அருகில் உள்ள சின்னப்பள்ளிவாசல் தர்காவில் நடைபெற்று வந்தது. 

அன்றைய காலகட்டத்தில் பெரியளவு வசதி வாய்ப்பு படைத்திருந்தவர்கள் இருந்தும் ஒரு மதரஸா கட்டுவதற்கான எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அன்றைய காலகட்டத்தில் நடுத்தரமானா குடும்ப பின்னணியில் வசித்து வந்த செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களின் மகன் தாயை சிறுவயதிலேயே இழந்த ஆனமண்டை குடும்பத்தைச் சார்ந்த மர்ஹூம் மு.செ.மு.முஹம்மது ஹனீப் ஆலிம் அவர்கள் பெண்கள் குழந்தைகள் ஓதுவதற்கும் மற்றும் பெண்கள் தொழுவதற்கு தனது சொந்த இடத்தில் சொந்த செலவில் மதரஸாவை கட்டி 08.03.1970-ஆம் ஆண்டு வக்பு செய்தார்கள்.

அதன் பிறகு தான் நமது ஊரில் பெண் குழந்தைகளுக்கு குர்ஆன் பாடசாலை, பெண்களுக்காக தராவீஹ் மற்றும் பெருநாள் தொழுகை முறையாக பெண்கள் மதரஸாவில் நடத்தப்பட்டது.

இதில் முக்கியத்துவம் என்னவென்றால் அன்றைய காலகட்டத்தில் ஒருவர் ஊருக்கு ஏதாவது வக்பு செய்கின்றார் என்றால் இடத்தை கொடுப்பார்கள், வயலைக் கொடுப்பார்கள் அல்லது அதையும் தாண்டி பார்த்தால் ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கான செலவினத்தை கொடுப்பார்கள். ஆனால் இரண்டும் சேர்ந்ததது போல் இடம் மற்றும் கட்டிடத்தை தனது பொருளாதார செலவிலேயே கட்டி வக்பு செய்தார் மர்ஹூம் மு.செ.மு.முஹம்மது ஹனீப் ஆலிம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எனக்குத் தெரிந்தவரை அன்றைய காலகட்டத்தில்  கோபாலப்பட்டிணத்தில் இது ஒன்றுதான் இடம் மற்றும் கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது என்று நான் கருதுகிறேன்.

தனது கடமையை கட்டிடம் கட்டி கொடுத்ததோடு விட்டுவிடாமல் தனது மகள் சம்சு நிஷா (மர்ஹூம்.முஹம்மது அலியார் அவர்களின் மனைவி) அவர்களை அதே மதரஸாவில் ஓதிக் கொடுக்கவும் வைத்தார்கள். மதரஸாவில் முப்பது ரூபாய் சம்பளம் முதல் 300 ரூபாய் சம்பளம் வரை பெற்று சுமார் 27 ஆண்டுகள் (1970-1997) வரை பணிபுரிந்து வந்தார். மேலும் அவர்கள் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் முதல் ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய காலகட்டத்தில் பெண்கள் மதரஸாவிற்கான நிர்வாகத்தினை மர்ஹூம்.பெரிய மு.மு.அப்பா மற்றும் அவர்களின் மனைவி மர்ஹூமா.அஹமதுமா ஹாஜிமா அவர்கள் திறம்பட செய்து வந்தார்கள். இவர்கள் மீரான் சேக்காதி, ஹாமீம் முஸ்தபா ஆலிம் மற்றும் பஷீர் அலி ஆகியோரின் பெற்றோர் ஆவார்கள்.

இவ்வாறாக சில ஆண்டுகள் நடைபெற்று வந்த மதரஸா பின்னாளில் குழந்தைகள் அதிகமாகி இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. பிறகு இடத்தினை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டு சிங்கப்பூர் ஜவுளி ஸ்டோர் உரிமையாளர் மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களுடைய தந்தையாரிடம் அருகில் கொள்ளையாக இருந்த இடத்தை ஊர் ஜமாஅத்தினர் வாங்கி முதல்முறையாக ரஹ்மானியா மதரஸாவை விரிவுபடுத்தினர். பிறகு சில காலம் செல்ல திரும்பவும் இடப்பற்றாக்குறை ஏற்பட மேலும் சுரக்கா அப்பா அவர்களின் மூத்த பேரனான ரபீக் அவர்களின் பாகத்தை ஊர் ஜமாஅத்தினர் இரண்டாவது முறையாக வாங்கி மேலும் விரிவுபடுத்தினர். இவ்வாறாக இந்த ரஹ்மானியா மதரஸா இப்பொழுது உள்ளது. 

இப்பொழுது அதை 51 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த இடத்தில் இருந்த ஓட்டு கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதுவே ரஹ்மானியா மதரஸாவின்  சுருக்கமான வரலாறு ஆகும்.

எனது வேண்டுகோள் என்னவெனில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற ரஹ்மானியா மதரஸாவை கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அதிலே இதன் சுருக்கமான வரலாறு அதாவது “ஆன மண்டை குடும்பத்தைச் சார்ந்த மர்ஹூம்.மு.செ.மு.முஹம்மது ஹனீப் ஆலிம் அவர்களால் சொந்த இடத்திலேயே சொந்த செலவிலேயே கட்டி 08.03.1970 அன்று வக்பு செய்யப்பட்டது என்ற விவரமும் இருமுறை இடப்பற்றாக்குறை காரணமாக அருகில் உள்ள இடங்களை வாங்கிய விபரமும் குறிப்பிடப்பட்டு தற்பொழுது புதிதாகக் கட்டி ஊர் ஜமாஅத்திற்கு வக்பு செய்பவருடைய விபரமும் குறிப்பிடப்பட வேண்டும்” என்பதே ஆகும்.

கடந்த 2019 நவம்பர் மாதம் ரஹ்மானியா மதரஸாவின் பழைய ஓட்டு கட்டிடம் இடிக்கப்பட்டு 04.12.2019 அன்று புதிய கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது கட்டிடப்பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய கட்டிடத்தை கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த தொழில் அதிபர் மு.மு.ஜகுபர் சாதிக் அவர்கள் தனது சொந்த பொருளாதாரத்தில் கட்டிடத்தை கட்டி ஊருக்கு வக்பு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படிக்கு..

மு.செ.மு.முஹம்மது ஹனிப் ஆலிம் அவர்களுடைய மகள் வழிப் பேரன் முஹம்மது இப்ராஹிம் அன்வாரி ஆலிம்
த/பெ மர்ஹூம் முஹம்மது அலியார்

இந்த பதிவில் தவறுகள் எதுவும் இருப்பின் எங்களுக்கு சுட்டி காட்டுங்கள் அதை திருத்தி கொள்கின்றோம்.

இந்த பதிவை இன்றைய தலைமுறைக்கு எடுத்து செல்வதில் GPM மீடியா மகிழ்ச்சி அடைகிறது.

இது போன்று நமது ஊரின் முக்கிய வரலாற்று பதிவுகள் இருந்தால் அதைப்பற்றி தெளிவாக எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அதை தாராளமாக GPM மீடியாவில் பதிவிடுகிறோம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments