அரிமளத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.





அரிமளம் பேரூராட்சி எட்டாம் மண்டகப்படி பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதே பகுதியில் மீண்டும் ஒரு டாஸ்மாக் கடையை திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து அந்த கடைக்கு டாஸ்மாக் மதுபானங்கள் கொண்டு வரப்பட்டு கடை நேற்று முதல் செயல்பட திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை அறிந்த அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த கூத்தான் தெரு, பாண்டியன் தெரு, வடக்கு தெரு, புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கடைக்கு முன் திரண்டனர். இத்தகவலை அறிந்த பொன்னமராவதி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் தலைமையில் ஏராளமான போலீசார் 3 டாஸ்மாக் கடைகள் முன்பும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பொதுமக்கள் தர்ணா

புதிதாக திறக்கப்பட இருந்த டாஸ்மாக் கடை முன்பு பொதுமக்கள் அமர்ந்து கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த திருமயம் தாசில்தார் பிரவீனாமேரி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அரிமளத்தில் மூன்றாவதாக கடை திறக்க வாய்ப்பு இல்லை என கூறி கடையை உடனடியாக மூடி சாவியை பெற்றுக்கொண்டார். அதன்பின் இந்த கடை தொடர்ந்து இப்பகுதியில் செயல்படாது என உறுதியளிக்கிறேன் என்று கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அப்போது பொதுமக்கள், இந்த கடை செயல்படாமல் நிறுத்துவதோடு முன்பு செயல்பட்டுக் கொண்டிருக்கும் 2 கடைகளையும் படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது தாசில்தார், உங்களுடயை கோரிக்கையை மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

போராட்டம் நடத்துவோம்

அப்போது சில பெண்கள் அரிமளம் 2 மேல்நிலைப்பள்ளி, ஏ.டி.எம். மையம், வங்கிகள், அதிக அளவிலான கோவில்களையும், குளங்களையும் கொண்ட பேரூராட்சியாக செயல்படுகின்றது. இங்கு அதிக அளவில் மதுக்கடைகளை திறக்கப்படுவதால் இளம் வயதில் விதவை ஆகும் பெண்கள் அதிகம். வெளியூரிலிருந்து வரும் நபர்கள் இங்கு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதோடு தூய்மையான பகுதிகளை அசுத்தம் செய்துவிட்டு பாட்டில்களை உடைத்து வீசிவிட்டு மது போதையில் பெண் குழந்தைகளை கிண்டலும் கேலியும் செய்கின்றனர். எனவே இப்பகுதியில் செயல்படும் மதுக்கடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments