புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் கூடுதல் நேரம் திறந்திருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு





புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் கூடுதல் நேரம் திறந்திருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ரெயில் சேவை அதிகரிப்பு

திருச்சி-ராமேசுவரம் வழித்தடத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை ரெயில் நிலையம் பழமையானது. புதுக்கோட்டை வழியாக சென்னை, காரைக்குடி, ராமேசுவரம், திருச்சி, புவனேஸ்வர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்த நிலையில் தற்போது ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டி சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் ரெயில்களில் பயணிகள் வழக்கம் போல பயணம் செய்ய தொடங்கி உள்ளனர். ரெயில் போக்குவரத்து சேவையும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

டிக்கெட் முன்பதிவு மையம்

இந்த நிலையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்களில் பயணம் செய்வோர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய மையம் உள்ளது. இதில் 3 கவுன்ட்டர்கள் இருந்தாலும் தற்போது ஒரு கவுன்ட்டரில் மட்டுமே ஊழியர் இருந்து டிக்கெட் வினியோகம் செய்து வருகிறார். இதில் தான் முன்பதிவில்லா டிக்கெட்டும் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த டிக்கெட் கவுன்ட்டர் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டும் திறந்திருக்கும். இந்த நேரம் பயணிகளுக்கு போதுமானதாக இல்லை. குறிப்பிட்ட நேரத்தை தவிர பகல் மற்றும் இரவில் டிக்கெட் எடுக்க வரும் பயணிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். இதனால் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டர் திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர். மேலும் மக்கள் பிரதிநிதிகளும் மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள், தெற்கு ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே வாரியத்திடமும் வலியுறுத்தி பயணிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

அடிப்படை வசதிகள்

புதுக்கோட்டை ரெயில் நிலையம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மூலம் வருவாய் அதிகரித்தப்படி உள்ளது. ரெயில் நிலையத்தில் குடிநீர் வசதி, பயணிகள் இருக்கை, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், ரெயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை காட்டும் பலகை பொருத்துதல் உள்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியில் மேற்கூரை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments