புதுக்கோட்டை மாவட்டத்தில் பயனானிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 349 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் மின்னணு பிரெய்லி ரீடர் மற்றும் கைத்தாங்கிகளையும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் தையல் எந்திரங்களையும் கலெக்டர் வழங்கினார்.
 
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம் பொறுப்பு) கணேசன், உதவி ஆணையர் (கலால்) மாரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுக்க பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பதிவு செய்யப்படும் இடத்தின் அருகே சாமியானா பந்தல் போடப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

 மனுக்கள் பதியும் இடம் அருகே உள்ள விநாயகர் கோவிலின் பக்கத்தில் குடிநீர் தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது வெயில் காலமாக இருப்பதால் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் தாகம் தீர்க்க வசதியாக குடிநீர் வசதி ஏற்படுத்தி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments