புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியது: 48 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை; பயணிகள் கடும் அவதி மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 2,195 பேர் கைது




புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நாள் வேலை நிறுத்தம் தொடங்கியதில் 48 சதவீத அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 2,195 பேர் கைது செய்யப்பட்டனர்.



புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வங்கி வெறிச்சோடி கிடந்த காட்சி.



புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.




பஸ்கள் முழுமையாக ஓடாததால் கீரனூர் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது.

அறந்தாங்கியில் பஸ் மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.


வேலை நிறுத்தம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் மார்ச் 28, 29-ந் தேதிகளில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த பலர் பணிக்கு செல்லவில்லை. இதனால், அரசு போக்குவரத்து கழகத்திற்கு குறைந்த அளவு பணியாளர்கள் வந்திருந்தனர்.

பஸ்கள் ஓடவில்லை

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை வெகு குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர். ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் அதில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தனியார் பஸ்கள் வழக்கம் போல இயங்கின. மாவட்டத்தில் மொத்தமுள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 382 அரசு பஸ்கள் உள்ள நிலையில் 260 பஸ்கள் வரை இயக்கப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். இதனால், 48 சதவீதம் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதேபோல ஆட்டோக்கள் பெரும்பாலும் ஓடவில்லை.

சாலை மறியல்

இதற்கிடையில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், அங்கன்வாடி பணியாளர்கள், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் உள்பட தொழிற்சங்கத்தினர் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சின்னதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இந்த மறியலால் மேலராஜ வீதியில் போக்குவரத்து பெரும் பாதிப்படைந்தது. அந்த வழியாக ஆம்புலன்ஸ் வந்த நிலையில் அதற்கு மட்டும் வழிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 1,495 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல மாவட்டத்தில் ஆங்காங்கே நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்ட மொத்தம் 2,195 போ் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

வங்கி சேவை பாதிப்பு

இதேபோல வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே உள்ள இந்தியன் வங்கி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியன் வங்கி அலுவலகம் முன்பு வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ரூ.50 கோடி வரை பணப்பரிவர்த்தனை பாதிப்படைந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இன்றும் வேலை நிறுத்தம்

தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். தொடர்ந்து இன்றும் (செவ்வாய்க்கிழமை) 2-வது நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அரசுத்துறை உயர் அதிகாரிகள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று பணிக்கு வராத அரசு ஊழியர்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டது.

அறந்தாங்கி-ஆவுடையார்கோவில்

அறந்தாங்கியில் சி.ஐ.டி.யு. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பஸ் நிலையம் அருகே சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முகமதுஅலிஜின்னா தலைமையில் பஸ் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 81 பேரை அறந்தாங்கி போலீசார் கைது செய்தனர்.

ஆவுடையார்கோவில் கடைவீதியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா செயலாளர் கலந்தர், ஒன்றிய செயலாளார் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், தொழிலாளர் சங்க மாவட்டக்குழு ஜெயமாலை பிச்சை முன்னிலையிலும் மறியல் போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

கந்தர்வகோட்டை-கீரனூர்

கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம், தொ.மு.ச. உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட135 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கீரனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிய செயலாளர் தங்கவேல் தலைமையில் காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.

அன்னவாசல்-பொன்னமராவதி

அன்னவாசலில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜோஷி தலைமையில் புதுக்கோட்டை-இலுப்பூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மொழிஅரசு தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர்.

பொன்னமராவதி காந்தி சிலையிலிருந்து அண்ணாசாலை வழியாக ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் கே.சண்முகம், மாவட்ட செயலாளர் ஏனாதி ஏ.எல்.ராசு, சி.ஐ.டி.யு. மாவட்ட துணைச் செயலாளர் ஏ.தீன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 96 பேர் கைதாகினர்.

கறம்பக்குடி-கீரமங்கலம்

கறம்பக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சீனிகடை முக்கத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 6 பெண்கள் உள்பட 56 பேரை கறம்பக்குடி போலீசார் கைது செய்தனர்.

கீரமங்கலத்தில், விவசாய சங்கங்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் செங்கோடன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆலங்குடி

அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் இணைந்து சந்தைப்பேட்டையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆலங்குடி வடகாடு முக்கத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ஆர். பாலசுப்பிரமணியன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதில், விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் சுந்தரராசன், இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் பழ.ஆசைத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆலங்குடி சி.ஐ.டி.யு. சார்பில் ஆட்டோ சங்கத்தினரும் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டதாக 123 பேர் கைது செய்யப்பட்டனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments