புதுக்கோட்டையில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
புதுக்கோட்டையில், பள்ளிக்கல்வி துறை சார்பில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. இதில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 150 பேர் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இயற்கை உணவு, நம்மை சுற்றியுள்ள உயிருள்ளவைகள், நகரும் பொருட்கள், மக்களும் எண்ணங்களும், பொருட்கள் எப்படி இயங்குகிறது மற்றும் இயற்கை நிகழ்வுகள், இயற்கை வளங்கள் ஆகிய தலைப்புகளில் இந்த கண்காட்சி நடைபெற்றது. இதில், குறிப்பாக இயற்கை உணவின் முக்கியத்துவம், கீரை வகைகள், பழங்களின் பயன்கள், சிறுதானிய உணவுகள் உள்ளிட்டவை குறித்து படைப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்தனர். இதேபோல ஏ.டி.எம். எந்திரங்களின் பயன்பாடு மாதிரிகள், குறள் மூலம் செயலியில் மூன்று சக்கர நாற்காலிகளை இயக்குவது, குடிநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளை வைத்து அசத்தியிருந்தனர். அவர்களது மாதிரி கண்டுபிடிப்புகளும் பிரமிக்க வைத்தது.

கண்காட்சியை கலெக்டர் கவிதாராமு தொடங்கி வைத்து ஒவ்வொரு அரங்கையும் பார்வையிட்டு மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்த்து வியந்ததோடு அவர்களை பாராட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கண்காட்சி தொடர்ந்து இன்றும்(புதன்கிழமை) நடக்கிறது. இதில், ஒவ்வொரு தலைப்பிலும் சிறந்த 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.
கண்காட்சியில் புத்தாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 2 மாணவிகள், இயற்கை உணவு மற்றும் பழரசங்களின் பயன்பாடுகள் குறித்து சினிமா பாடல் பின்னணியில் பாடல்களை பாடினர். இந்த பாடல் அனைவரையும் கவர்ந்தது. இதில் மாணவி ஒருவர் பாடிக்கொண்டிருக்கும் போது திடீரென மயக்கமடையும் நிலைக்கு சென்றார். அவருக்கு அங்கிருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் கொடுத்து ஆசுவாசுப்படுத்தினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments