உக்ரைனில் இருந்து கோபாலப்பட்டிணம் வந்தடைந்த மருத்துவ கல்லூரி மாணவர் ரியாஸ் கான்
உக்ரைனில் இருந்து கோபாலப்பட்டிணம் மருத்துவ கல்லூரி மாணவர்  ரியாஸ் கான் சொந்த ஊர் வந்தடைந்தார்.

ரஷிய போரால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் அவுலியா நகரைச் சேர்ந்த ஜகுபர் சாதிக் அவர்களின் மகன் ரியாஸ் கான் (வயது 20). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள உஷ்கோரத் நகரில் தங்கி அங்குள்ள உஷ்கோரத் நேஷனல் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவருடன் தமிழ்நாட்டை சேர்ந்த பல மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். 

தற்போது உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருவதால் ரியாஸ் மற்றும் நண்பர்கள் அங்கு தவித்து வந்தனர். அவரை மீட்டுத்தரக்கோரி மாணவரின் பெற்றோர் , உறவினர்கள் ‌, சமூக ஆர்வலர்கள்  மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இன்று காலை மாணவர் ரியாஸ் கான் உக்ரைன் நாட்டில் இருந்து கோபாலப்பட்டிணம் வந்தடைந்தார். அவரை பெற்றோர் உணர்ச்சி பொங்க வரவேற்றனர்.

உஷ்கோரத் - புட்டாபேஸ்ட் - மும்பை - சென்னை - திருச்சி - கோபாலப்பட்டிணம்

ரியாஸ் கான் உக்ரைன் நாட்டின் அருகே உள்ள ஹங்கேரி நாட்டிற்கு எல்லை வழியாக கடந்த 6 நாட்களுக்கு முன் அழைத்து வரப்பட்டு புடாபெஸ்ட் என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டர். இதனிடையில் புடாபெஸ்ட்லிருந்து இந்திய அரசு ஏற்பாடு செய்த விமானத்தில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மும்பை விமான நிலையத்திற்கு நேற்று காலை 09‌.00 மணியளவில் வந்தடைந்தார். தமிழக அரசு ஏற்பாடு செய்த விமானத்தில் மும்பையில் இருந்து நேற்று மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு நேற்று மாலை 6.15 மணிக்கு வந்தடைந்தார். பிறகு சென்னையில் இருந்து நேற்று இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு  திருச்சிக்கு நேற்று இரவு 11.15 மணிக்கு வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த நண்பர்கள், இளைஞர்கள் உணர்ச்சி பொங்க வரவேற்றனர்.

கேபாலப்பட்டிணத்தை சேர்ந்த ரியாஸ் கானை திருச்சி விமான நிலையத்தில் வரவேற்ற போது எடுத்த புகைப்படங்கள்:வீடியோ


பின்னர் அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலமாக திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் சொந்த ஊரான கோபாலப்பட்டிணம் வந்தடைந்தார். பெற்றோர்கள் உறவினர்கள் உணர்ச்சி பொங்க வரவேற்றனர்.

உக்ரைனில் இருந்து சொந்த ஊர் திரும்பிய கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த ரியாஸ்  கூறியதாவது:-

உக்ரைன் நாட்டில் போர் நடந்த போது எங்களை கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டது. போர் ஆரம்பித்த நாள் முதலே உக்ரைனில் உள்ள பிரவசலவ்னா நபரிஸ்னா 8, உஷ்கோரத் இடத்தில் தங்கி இருந்தேன் அங்கிருந்து எல்லை வழியாக பஸ் மூலமாக ஹங்கேரி நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு தலைநகர் புத்தபெஸ்ட் என்னும் இடத்தில் தானுபியஸ் ஹோட்டலில் கடந்த 6 நாட்களுக்கு மேலாக தங்கிருந்தோம். அங்கிருந்து மத்திய அரசு குழுவினர் இந்திய மாணவர்களை மும்பை அழைத்து வந்தனர். அங்கிருந்து சென்னை வழியாக திருச்சி வந்தடைந்தோம். பின்னர், எங்களை சொந்த ஊருக்கு காரில் அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

என்னை போன்ற மாணவ-மாணவிகள் இன்னும் அங்கு உள்ளனர். அவர்களையும் மத்திய-மாநில அரசுகள் மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments