திருமயம் அருகே கல்குவாரிக்கு தடை விதிக்க கோரிகலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க திரண்டு வந்த பொதுமக்கள்




திருமயம் அருகே கல் குவாரிக்கு தடை விதிக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் திரண்டு வந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கவிதாராமு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் திருமயம் அருகே காட்டுப்பாவா பள்ளிவாசல் பக்கம் மெய்யாபுரம் பகுதியில் இயங்கி வரும் கல்குவாரிக்கு தடை விதிக்க கோரி மனு கொடுப்பதற்காக அந்த கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

இதில் பெண்கள் அதிக அளவில் வந்த நிலையில் அவர்கள் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் அனுமதிக்காமல் நுழைவுவாயிலில் தடுத்தனர். குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே மனு கொடுக்க அனுமதி என்றனர். இதனால் பொதுமக்களும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கட்டிடங்கள் சேதம்

இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட நபர்கள் மட்டும் மனு கொடுக்க போலீசார் அனுமதி அளித்தனர். அதன்பின் அவர்கள் சென்று கலெக்டரிடம் மனு அளித்தனர். மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கூறுகையில், ‘‘கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட அந்த கல் குவாரியில் வெடி வைத்து கற்கள் தகர்க்கப்படுவதில் அப்பகுதியில் வழிபாட்டு தலங்கள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. மேலும் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகிறது. வெடி வைத்து வெடிப்பதினால் பயங்கர சத்தம், அதிர்வு ஏற்படுகிறது.
 
எனவே அந்த கல் குவாரி தொடர்ந்து இயங்க தடை விதிக்க வேண்டும்’’ என்றனர். மனுவை பெற்ற கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதேபோல புதுக்கோட்டை டி.வி.எஸ். கார்னில் உள்ள டாஸ்மாக் கடைகளை நகரின் வெளிப்பகுதியில் மாற்றி அமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் நகர்மன்ற வார்டு உறுப்பினர் மனு அளித்தார். மேலும் பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 401 மனுக்கள் பெறப்பட்டன. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தையல் எந்திரங்கள்
மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70 ஆயிரம் மதிப்பீட்டில் மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களை கலெக்டர் கவிதாராமு வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments