பொதுத்தேர்வின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன? கல்வித்துறை அறிவிப்பு




பொதுத்தேர்வுகளின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கல்வித்துறை அறிவித்துள்ளது.

கண்காணிப்பு கேமரா அவசியம்

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம் (மே) தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தேர்வுகளின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கல்வித்துறை அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு கையேட்டை உருவாக்கி உள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மாவட்டத்தில் உள்ள அனைத்து வினாத்தாள் கட்டு காப்பு மையங்களையும் முதன்மை கல்வி அலுவலர்கள் நேரிடையாக சென்று ஆய்வு செய்து, உரிய பாதுகாப்புடன் உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

வினாத்தாள் கட்டு காப்பு மையங்களில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும். இந்த மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

* 10, 11, 12 ஆகிய 3 பொதுத்தேர்வுகளுக்கும் தனித்தனியே வினாத்தாள் கட்டுகாப்பு மையம் அமைக்க வேண்டும். 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு ஒரே பள்ளியே வினாத்தாள் கட்டு காப்பு மையமாக அமைக்கப்படும் சூழ்நிலையில், 2 தேர்வுகளுக்குமான வினாத்தாள் கட்டுகள் கண்டிப்பாக தனித்தனி அறைகளில் மட்டுமே வைக்கப்பட வேண்டும்.

அடையாள அட்டை

* தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை முதன்மை கண்காணிப்பாளராக நியமனம் செய்யக்கூடாது. அதேபோல், தனியார் பள்ளிகளின் முதல்வரையோ, துணை முதல்வரையோ, ஆசிரியர்களையோ எந்த தேர்வு மையத்துக்கும் முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்க கூடாது.

* தேர்வு நாட்களில் தேர்வுக்கு முன் சரியான நேரத்தில் வினாத்தாள்களை தேர்வு மையங்களில் சென்று ஒப்படைக்கும் வகையில் வழித்தடங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். அதற்கு கண்காணிப்பு அலுவலரின் ஒப்புதல் பெறவேண்டும்.

* பறக்கும் படை உறுப்பினர்களை நியமிக்கும் போது தேர்வு நடைபெறும் அன்றைய பாடத்தினை போதிக்கும் ஆசிரியர்களாக இல்லாதவாறு ஆய்வு அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

* அரசுத்தேர்வுகள் இயக்ககத்தால் தேர்வு பணிகளில் ஈடுபடும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்கும். அடையாள அட்டையின்றி தேர்வு மையத்தில் பணியாற்றக்கூடாது. அவ்வாறு பணிபுரிந்தால், சம்பந்தப்பட்ட துறை அலுவலரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சாதாரண கைக்கடிகாரம்

* தேர்வு நடைபெறும் அன்று காலை 9.25 மணிக்கு வினாத்தாள் சிப்பங்களை எடுத்து, 9.30 மணிக்கு அறைக்கண்காணிப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வறைக்கு ஏற்ப வினாத்தாள் உறைகளை வழங்க வேண்டும்.

* தேர்வு நடைபெறும் தினத்தன்று காலை 8.30 மணிக்கு மேல் தேர்வு மையமாக செயல்படும் பள்ளியை சேர்ந்த எந்த ஒரு பணியாளரும் தேர்வு மைய வளாகத்தில் கண்டிப்பாக இருக்கக்கூடாது. எக்காரணங்களை கொண்டும் அதே பள்ளியின் பணியாளர்களை அலுவலக பணிக்கு உட்படுத்தக்கூடாது.

* தேர்வர்கள் செல்போனை கண்டிப்பாக எடுத்துவரக்கூடாது. நேரத்தை மட்டும் காட்டும் சாதாரண கைக்கடிகாரத்தை மட்டுமே அணிந்துவர தேர்வர்களுக்கு அனுமதி. தேர்வு மையங்களில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் அன்றைய தேர்வினை தொடர்ந்து எழுத இயலாது. தொடர்ந்து வரும் இதர தேர்வுகளை எழுத அனுமதிக்கலாம். ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட தேர்வரின் முகப்புச்சீட்டில் ‘மால்' என உள்ள கட்டத்தில் சிவப்பு மையினால் ‘டிக்' செய்யப்பட வேண்டும்.

* அறை கண்காணிப்பாளர்கள் தங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள், உத்தரவுகள் இதில் வழங்கப்பட்டு உள்ளன.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments