அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை கலெக்டர் கவிதாராமு எச்சரிக்கை





புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த மீளாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டா் கவிதாராமு தலைமை தாங்கி பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்வித் தரத்துடன் உடல்நலம் சார்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்களின் உயரம், எடையை கணக்கிட்டு எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் பள்ளி செல்லாத குழந்தைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்கிட வேண்டும். விளையாட்டு பாட வேளைகளில் மாணவர்களுக்கு பாட நடத்த ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது. கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்திட வேண்டும். இல்லம் தேடிக் கல்வித் திட்ட மையங்களை அதிகப்படுத்திட வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுகொடுக்க வேண்டும். வகுப்பறை கட்டிடங்கள் கூடுதலாக தேவைப்படும் பள்ளிகள் குடிநீர், கழிவறை போக்குவரத்து போன்ற வசதிகள் தேவைப்படும் பள்ளிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார். கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) பஷினாபீவி உள்பட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments