7 ஆண்டுகள் என்பது குறைக்கப்படும்: கடலில் மாயமான மீனவர்களுக்கு வெகுவிரைவில் இறப்பு சான்றிதழ்




கடலில் மாயமான மீனவர்களுக்கு வெகு விரைவில் இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்

சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் (கிள்ளியூர் தொகுதி) பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

7 ஆண்டுகளுக்கு பிறகு இறப்பு சான்றிதழ்

தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து படகில் மீன்பிடிக்க சென்ற ரபேல் என்ற மீனவர், புறப்பட்ட அரை மணி நேரத்தில் இடி-மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இதேபோல், கடந்த 8-ந்தேதியும் ஒரு மீனவர் உயிரிழந்தார். அவர்களது குடும்பத்துக்கு நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலையும் வழங்க வேண்டும்.

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மண்டல் கமிஷன் பரிந்துரைத்துள்ளது. அதை நிறைவேற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் காணாமல் போனால், 7 ஆண்டுகளுக்கு பிறகே அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதற்குள் அவர்கள் குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதற்கு பதில் அளித்து மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

வெகு விரைவில் வழங்க ஆய்வு

இடி-மின்னல் தாக்கி மீனவர்கள் இறந்ததாக உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். அந்த மீனவர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்தாலோ, காப்பீடு திட்டத்தில் இருந்தாலோ உரிய நிவாரணம் பெற்று வழங்கப்படும். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்கிறார். அதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், கடலில் மாயமான மீனவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகே இறப்பு சான்றிதழ் வழங்கப்படுவதாக கூறினார். தி.மு.க. தேர்தல் வாக்குறுதியிலேயே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். எனவே, இறப்பு சான்றிதழ் வெகு விரைவில் வழங்குவது தொடர்பாக இப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments