புதுக்கோட்டையில் விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரிகளிடம் ரூ.18½ லட்சம் மோசடி 3 பேர் கைது
புதுக்கோட்டையில் விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக பட்டதாரிகளிடம் ரூ.18½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விமான நிலையத்தில் வேலை

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (வயது 25). இவர் டிப்ளமோ மெக்கானிக் படித்து முடித்திருந்தார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (46), சென்னை வண்ணாரபேட்டையை சேர்ந்த முகமத்லாபீர் (38), மன்சூர் (41) ஆகியோர் அறிமுகமாகினர். மேலும் முத்துக்கிருஷ்ணனிடம் விமானநிலைய ஆணையத்தின் மூலம் விமானநிலையத்தில் வேலைவாங்கி தருவதாகவும், இதற்கு பணம் கொடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளனர்.

இதேபோல பட்டதாரியான மற்ற சிலரிடமும் அவர்கள் கூறியுள்ளனர். இதனை நம்பிய முத்துக்கிருஷ்ணன் மற்றும் 14 பேர் சேர்ந்து அவர்களிடம் பணம் கொடுத்தனர். 15 பேரிடம் மொத்தம் ரூ.18 லட்சத்து 40 ஆயிரத்தை ஸ்ரீகாந்த், முகமத்லாபீர், மன்சூர் ஆகியோர் பெற்றுள்ளனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் பணத்தை பெற்ற பின் வேலைவாங்கி கொடுக்கவில்லை என தெரிகிறது. பணம் கொடுத்தவர்கள் தங்களுக்கு வேலை வாங்கி கொடுக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். இல்லையெனில் பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தனர்.

இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் முத்துக்கிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரிமன்னன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக ஸ்ரீகாந்த், முகமத்லாபீர், மன்சூர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments